ஹீலியம் (HNT) என்றால் என்ன? உங்கள் ஆகச்சிறந்த வழிகாட்டி
எளிதில் நிறுவி இயக்கத்தக்க இந்த கிரிப்டோ மைனர் ஒரு மையமில்லா இணையத் தொடர்பைக் கட்டமைக்கிறது

உள்ளடக்கம்
- ஹீலியம் வலைத்தொடர்பு விளக்கம்
- ஹீலியம் நாணயம் எப்படிச் செயல்படுகிறது?
- ஹீலியம் (HNT) என்றால் என்ன?
- டிஷ் உடனான கூட்டாண்மை
- ஹீலியம் கிரிப்டோ மதிப்பாய்வு
- ஹீலியம் விலை வரலாறு
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கிரிப்டோகரன்சிகளில் மைனிங்கும் முதலீடும் சிக்கலான நடைமுறை. உங்களுக்காக தானாகவே கிரிப்டோகரன்சிகளை ஈட்டித்தரும் ஒரு வன்பொருள் இருந்தால் எப்படி இருக்கும்?
ஹீலியம் ஒரு பிளாக்செயின் அடிப்படையிலான வலைத்தொடர்பைக் கட்டமைத்து வருகிறது. இதில் பயனர்கள் ஒரு ஹாட்ஸ்பாட்டில் செருகும்போது அவர்களுக்கு ஹீலியமின் சொந்த கிரிப்டோகரன்சியான HNT வெகுமதியாக அளிக்கப்படுகிறது. இந்த வலைத்தொடர்பு உண்மையில் செல்லப்பிராணிகளின் கழுத்துப் பட்டை போன்ற மின்கலங்கள் மூலம் இயங்கும் சாதனங்கள் வெகு தொலைவுக்கு சிறிய அளவில் தரவுகளை அனுப்பும் தேவைக்காக வடிவமைக்கப்பட்டது.
சமீபத்தில் ஹீலியம், டிஷ் உடன் சேர்ந்து 5G வலைத்தொடர்பை வழங்கும் ஒரு புதிய பிரவேசத்தை அறிவித்துள்ளது. இது ஹீலியத்தின் முதலாவது மிகப்பெரிய கூட்டாண்மை.
இந்தப் புதியக் கூட்டாண்மையுடன் சேர்ந்து உலகெங்குமுள்ள 300,000 ஹாட்ஸ்பாட்டுகள் காரணமாக ஹீலியம் அதிகளவு கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹீலியம் வலைத்தொடர்பு விளக்கம்
2013ல் கலிபோர்னியாவில், ஷான் ஃபானிங், அமீர் ஹலீம், ஷான் கேரி ஆகியோரால் இணைய சமாச்சாரங்களை (IoT) மாற்றும் நோக்கத்துடன் ஹீலியம் நிறுவப்பட்டது. ஹீலியத்தின் இலட்சியம் எதிர்காலத்துக்கான மனித இடையூறின்றி, கம்பியில்லா வடங்கள் மூலம் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இணையத்தொடர்பை உருவாக்குவதன் மூலம், அதன் உள்கட்டமைப்பை மையமில்லாததாக ஆக்குவதாகும்.
ஹீலியம் ஹாட்ஸ்பாட் என்பது பயனர்கள் செருகிக்கொள்ளத் தக்க ஒரு வன்பொருள் உறுப்பு. இது ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இணையத்தொடர்பை வழங்குவதுடன், பங்கேற்பவர்களுக்கு அதன் சொந்த டோக்கனான HNTயை வெகுமதியாக அளிக்கிறது. ஹாட்ஸ்பாட் செயலுக்கு வந்ததும், Helium LongFi என்ற வடமில்லா நெறிமுறையைப் பயன்படுத்தும் எந்த சென்சாரும் வலைத்தொடர்புடன் இணைய முடியும்.
ஹீலியம் வலைத்தொடர்பு 2019ல் துவங்கப்பட்டது. ஏற்கெனவே 300,000 உலகளாவிய ஹாட்ஸ்பாட்டுகள் இதற்கு உள்ளன. அத்துடன் உலகின் மிகப்பெரிய LoRaWAN வலைத்தொடர்பாகவும் உள்ளது.
LoRaWAN என்பது இரண்டு தொழில்நுட்பங்களின் இணைப்பு: LoRa - ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி தகவல்களைக் குறியாக்கம் செய்வது; WAN - குறைந்த ஆற்றலில் பரந்த பரப்பு வலைத்தொடர்பு (WAN) வழங்குதல். மின்கலங்கள் மூலம் இயங்கும் சாதனங்கள் வெகு தொலைவுக்கு சிறிய அளவில் தரவுகளை அனுப்பும் தேவைக்காக ஹீலியம் வலைத்தொடர்பு வடிவமைக்கப்பட்டது. இதில் செல்லப்பிராணிகளின் கழுத்துப்பட்டை, சுற்றுச்சூழல் உணரி, ஈருளி (bike) கண்காணிப்புகள் போன்றவை அடங்கும். தற்போது ஆயிரக்கணக்கான இணங்கத்தக்க LoRaWAN சாதனங்கள் உள்ளதாக ஹீலியம் இணையதளம் சொல்கிறது.
ஹீலியம் நாணயம் எப்படிச் செயல்படுகிறது?
பெரும்பாலான பிளாக்செயின்கள் பணிச்சான்று (PoW) அல்லது பங்குச்சான்று (PoS) நெறிமுறைகள் வாயிலாக கிரிப்டோகரன்சியை மைன் செய்ய பயனர்களை அனுமதிக்கின்றன. ஹீலியம் தனக்கென செயலெல்லைச் சான்று (Proof of Coverage) என்ற சொந்த அமைப்பைக் கொண்டுள்ளது. வலைத்தொடர்பானது பயனர்களுக்கு நம்பகமான செயலெல்லையை வழங்குவதையும், அவர்களுக்கு வெகுமதியளிக்கும் சொந்த முறையையும் சார்ந்துள்ளது. இந்தச் செயலெல்லைச் சான்று அதன் இடத்துக்கான வலைத்தொடர்பினை ஒரு ஹாட்ஸ்பாட் வழங்குகிறதா என்பதைச் சரிபார்க்கிறது. சான்றாக தூரம், வேகம் மற்றும் ரேடியோ அலைவரிசையின் வலு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
செயலெல்லைச் சான்று சவால்கள் மூலமாக இடம்பெறுகிறது. இதில் ஹாட்ஸ்பாட்டுகள் ஒன்றுக்கொன்று அதன் ரேடியோ அலைவரிசைகளைச் சோதிக்கின்றன. ஹீலியம் பிளாக்செயினில் மில்லியன் கணக்கிலான சவால்கள் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு புதிய சவாலும் வலைத்தொடர்பின் தரம் குறித்த கூடுதல் தகவலைப் பதிவு செய்கிறது.
ஒரு சவால் என்பது ஒரு விவாதத்துக்குப் பிறகு உங்கள் நண்பரை தொலைபேசியில் அழைத்து உறுதிசெய்து கொள்வது போல. சவால்விடுபவரின் ஹாட்ஸ்பாட் சவாலை ஏற்பவரின் ஹாட்ஸ்பாட்டை ஒரு தகவல் பாக்கெட்டை அனுப்புவதன் மூலம் அழைக்கும். ஆனால் சவாலை ஏற்பவர் சவால்விடும் நண்பருக்கு பதிலளிப்பதில்லை. அதற்குப் பதிலாக தகவலைக் குறிநீக்கம் செய்து அதன் ரேடியோ அலைவரிசையை உறுதிப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட தகவலின் சமிக்ஞையை அனுப்பும். இந்தத் தகவலானது அருகிலுள்ள சாட்சியாயிருக்கும் ஹாட்ஸ்பாட்டுகளில் ஏதாவதொன்றினால் எடுக்கப்படுகிறது. இது ஒரு வதந்தி போலத்தான். இந்தச் சாட்சிகள் இந்தச் சரிபார்க்கப்பட்ட தகவலை பிளாக்செயினுக்கு அனுப்புகின்றன.
ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டும் அது சவால்விடுபவராகவோ, சவாலை ஏற்பவராகவோ அல்லது சாட்சியாகவோ இருந்து சவாலில் பங்கெடுக்கின்றன. இதன் மூலம் பிளாக்செயினின் சொந்த கிரிப்டோகரன்சியான ஹீலியத்தை (HNT) வெகுமதிகளாகப் பெறுகின்றன.
ஹீலியம் (HNT) என்றால் என்ன?
ஹீலியம் நாணயத்துக்கு இரு முக்கிய நோக்கங்கள் உள்ளன. சவால்களில் பங்கேற்கும் பயனர்களுக்கு பிளாக்செயினின் சொந்த கிரிப்டோகரன்சியான ஹீலியம் (HNT) வெகுமதியாக அளிக்கப்படுகிறது.
எந்த HNTயும் முன்கூட்டியே மைன் செய்யப்பட மாட்டாது. முதல் HNT ஜூலை 2019ல் உற்பத்தி செய்யப்பட்டது. தொடக்ககட்ட தொகுதி மைன் செய்யப்பட்டபின், மாதத்துக்கு 5 மில்லியன் HNT, அதாவது வருடத்துக்கு 60 மில்லியன் HNTயைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் ஹீலியம் வலைத்தொடர்பு செயல்படத் தொடங்கியது. நவம்பர் 2020ல் சமூக ஒப்புதலைப் பெற்ற பின்பிலிருந்து, உற்பத்தி செய்யப்படும் ஹீலியங்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதியாக்கப்படுகிறது. இது முதல் HNT தொகுதி மைன் செய்யப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. அதாவது 50 ஆண்டுகளில் 3.6 HNT மட்டுமே வருடத்துக்கு மைன் செய்யப்படும்.
இதற்கான அதிகபட்ச வழங்கல் வரம்பாக 223 மில்லியன் உள்ளது. பிளாக்செயினில் கிட்டத்தட்ட இதில் பாதியளவு தற்போது புழக்கத்தில் (102.6 மில்லியன் HNT) உள்ளது. நவம்பர் 24ம் தேதிப்படி, ஒரு ஹீலியம் நாணயத்தின் விலை $43.38.
மைனர்களுக்கு வெகுமதி அளிப்பது போலவே, ஹீலியம் கிரிப்டோகரன்சி வேறொன்றுக்கும் பயன்படுகிறது. பயனர்கள் ஹீலியத்தை ஒரு கணக்குக்கு அனுப்பி டேட்டா கிரெடிட்ஸ் (DC) உருவாக்கலாம். இதை ஒரு டோக்கனாகப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளுக்கும் வலைத்தொடர்பு கட்டணங்களுக்கும் உபயோகிக்கலாம். 1 DC $0.00001 என்ற மதிப்பில் டேட்டா கிரெடிட்ஸ்களை மாற்றிக் கொள்ளலாம்.
டேட்டா கிரெடிட்ஸ் என்பது கைபேசி அழைப்பு நிமிடங்களைப் போல: இவை நுகர்வோர் ஹீலியம் வலைத்தொடர்பைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்ப அனுமதிக்கிறது. இந்த டோக்கன்களை வேறொருவருக்கு உரிமை மாற்றம் செய்ய முடியாது. உண்மையான உரிமையாளரால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். டேட்டா கிரெடிட்ஸ்களுக்கு ஒரு தெளிவான நோக்கம் இருப்பதாலும், HNT அரிதானதாக ஆகி வருவதாலும், இந்த இரட்டை டோக்கன் அமைப்பு ஹீலியத்தின் விலையேற்றம் அதன் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதை உறுதிசெய்கிறது.
டிஷ் உடனான கூட்டாண்மை
அக்டோபரில், ஹீலியத்தை பெருமளவிலான மக்களுக்கு மையமில்லா வலைத்தொடர்பாக வழங்குவதற்காக மாபெரும் இணையச் சேவை நிறுவனமான டிஷ் உடன் கூட்டாண்மை ஏற்படுத்திக் கொண்டதை பிளாக்செயின் வெளியிட்டது. இந்தக் கூட்டாண்மை டிஷ் வலைத்தொடர்பு பயனர்களுக்கு ஹீலியம் முனையங்களை இயக்கும் வாய்ப்பையும் தங்களது 5G வலைத்தொடர்பை அந்தப் பகுதியில் உள்ளோருக்குப் பகிர்வதன் மூலம் வெகுமதிகளை ஈட்டவும் வாய்ப்பை வழங்குகிறது.
ஹீலியத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஃப்ராங்க் மோங் Decrypt-க்குக் கூறியது: “வயர்லெஸ் துறையில் பிளாக்செயினின் சாத்தியத்தை டிஷ் புரிந்துகொண்டுள்ளது. மக்களின் வலைத்தொடர்பான இதில் இணையும் பிரதான நிறுவனமாக டிஷ் உள்ளது. இந்தக் கூட்டாண்மை HNT ஊக்கத்தொகை மாதிரி வடிவமானது அளவுக்குத் தக்கபடி உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த கருவி என்பதை உறுதிப்படுத்துகிறது.”
ஹீலியம் சமூகம் ஏப்ரலில் FreedomFi உடன் கூட்டாண்மை மூலம் 5G வலைத்தொடர்பை ஏற்படுத்திய பின்பாக டிஷ் உடனான கூட்டாண்மை வருகிறது. இது பல்திறன் பேசிகள், டேப்லட்டுகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு ஹீலியம் வலைத்தொடர்பை அளிக்கவும் அனுமதிக்கிறது.
ஹீலியம் கிரிப்டோ மதிப்பாய்வு
ஹீலியம் மதிப்பாய்வுகள் ஒப்பீட்டளவில் நேர்மறையாகத்தான் உள்ளன. ஆனால் இந்த பிளாக்செயின் அடிப்படையிலான வலைத்தொடர்புக்கும் நிச்சயம் தடைகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் பலனளிக்கக்கூடியது என்றும், எதிர்காலத்தில் நீண்டகால இலாபகரமுடையதாக இருக்குமென்றும் Coinbureau கணிக்கிறது. கிட்டத்தட்ட ஹாட்ஸ்பாட்டுக்கான $400 செலவு இல்லாமல் போகிறது எனினும் வலைத்தொடர்பு வளர்ச்சியைப் பார்ப்பதற்கு போதிய இடமுள்ளது என்றும் குறிப்பிடுகிறது.
எனினும் CoinBureau ஹீலியம் கிரிப்டோகரன்சி பாதியாக்கம் எப்படி மைனர்களைப் பாதிக்கும் என்பது குறித்த கவலையை எழுப்புகிறது. அது சொல்வதாவது: “ஹாட்ஸ்பாட் உரிமையாளர்களுக்கு உள்ள ஒரு கேள்வி பாதியாக்கம் அவர்களை எப்படி பாதிக்கும் என்பதுதான். தாங்கள் ஈட்டியதில் பாதியை அவர்கள் இழப்பார்கள். அதேநேரம் பாதியாக்கமானது டோக்கன் வருவாய் இழப்பை ஈடுசெய்யும்படி மதிப்பில் போதிய ஏற்றத்தை உருவாக்கவும் செய்யும்.
Trusted Reviews ஹீலியம் ஹாட்ஸ்பாட் அமைப்பதில் உள்ள எளிமையைப் போற்றுகிறது. ஆனால் ஒரு இடத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஹாட்ஸ்பாட்டுகளின் எண்ணிக்கையையும் பொறுத்து ஈட்டல்கள் மாறுபடும் என்பதால் அதிகளவிலான ஆரம்பகட்ட முதலீட்டு விலை குறித்து அது குறிப்பிடுகிறது. அதாவது ஒரு பயனர் தனது வன்பொருள் செலவுகளைத் திரும்ப ஈட்டுவாரா, எப்போது என்பதைக் கணிக்க முடியாது.
பயனர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பெரிய கவலை, பாதுகாப்பு. வழக்கமான வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் அதற்கென்றே உரிய தீய தாக்குதல் வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. வலைத்தொடர்பில் தனிப்பட்ட சாதனங்களை ஊடுருவலாளர்களால் அணுகமுடியும். ஹீலியம் இப்போதும் புதிதுதான் என்பதால், தீய தாக்குதல்களாக ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை.
”வலைத்தொடர்பு மற்றும் ஹாட்ஸ்பாட் உரிமையாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது” என்று ஹீலியம் இணையதளம் சொல்கிறது. அத்துடன் “பாதுகாப்பு கவலைகள் எங்கும் காணப்படுகின்றன.” என்றும் எச்சரிக்கிறது. தனது வலைத்தொடர்பைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் பல முறைமைகளை ஹீலியம் பயன்படுத்துகிறது. ஹாட்ஸ்பாட்டிலுள்ள ஒன்றைத் தவிர அனைத்து நுழைவாயில்களும் ஃபயர்வால் (firewall) மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வன்பொருளும் அமெரிக்க மத்திய தகவல்தொடர்பு ஆணையத்தின் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கியிருப்பதுடன், வலைத்தொடர்பைப் பயன்படுத்துவதற்கான செலவு ஒரு தடையாகவும் இருக்கக்கூடும்.
ஆனால் சில முறைமைகள் அதன் தற்போதைய LoRaWAN வலைத்தொடர்புக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. ஹீலியத்தின் நடைமுறைகள் அதன் 5G வலைத்தொடர்புப் பாதுகாப்பை எப்படிக் கைக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஹீலியம் விலை வரலாறு
முதல் ஆறு மாதங்களுக்கு ஹீலியம் நாணயத்தின் விலை $2க்குக் கீழாகவே இருந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏறுமுகத்துக்கு மாறத் தொடங்கி மே 28ல் $19.51 என்ற உச்சத்தைக் கண்டது. பின் ஜூலையில் $10க்கு இறங்கியது.
இந்த மாதத் துவக்கத்தில் ஹீலியன் இன்னொரு மேல் நோக்கிய எழுச்சியைப் பார்த்தது. நவம்பர் 1ல் $28.26 ஆக இருந்த விலை நவம்பர் 12ல் புதிய உச்சமான $55.22ஐத் தொட்டது. அதன் பின்பிலிருந்து HNT நாணயம் இறங்குமுகமாக உள்ளது. நவம்பர் 25 நடுப்பகல் நேரப்படி நாணயத்தின் விலை $47.27 ஆக இருந்தது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை ஹீலியம் நாணயங்கள் உள்ளன?
தற்போது புழக்கத்தில் 102.6 மில்லியன் HNT உள்ளன. இது அதன் மொத்த வழங்கலான 223 மில்லியன் HNTயில் இது கிட்டத்தட்ட பாதியாகும்.
ஹீலியம் எப்படி மைனிங் செய்யப்படுகிறது?
செயலெல்லைச் சான்று மூலமாக ஹீலியம் மைன் செய்யப்படுகிறது. இதில் ஹாட்ஸ்பாட்டுகள் அந்தப் பகுதியில் வலுவான வைஃபை அலைவரிசையை வழங்குவதை நிரூபிக்க ஒன்றுக்கொன்று சவால்விடுகின்றன. ஒரு சவாலுக்குப்பின், சவால் விடுபவர், கடத்துபவர், சாட்சி என அனைவருமே HNTயின் ஒரு பகுதியைப் பெற்று பலனடைகின்றனர்.
ஹீலியம் நாணயத்தை நான் எங்கு வாங்க முடியும்?
Coinranking அறிக்கைப்படி, ஹீலியம் 11 சந்தைகளில் கிடைக்கிறது. இவற்றில், Binance, Crypto.com, WazirX போன்றவையும் அடங்கும். ஞாபகமிருக்கட்டும், நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். உங்களால் இழக்க முடிந்ததற்கும் அதிகமாக ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.