ஜனவரி 2022ல் சிறப்பாக/மோசமாகச் செயல்பட்ட கிரிப்டோகரன்சிகள்
ஜனவரி 2022 கிரிப்டோவுக்கு நல்ல மாதமாக அமையவில்லை. ஆனால் பொதுவான போக்குக்கு மாறாக ஏற்றம் கண்ட நாணயங்கள் எவை?

உள்ளடக்கம்
- ஜனவரி 2022ல் நன்றாகச் செயல்பட்ட நாணயங்கள்
- ஜனவரி 2022ல் மோசமாகச் செயல்பட்ட நாணயங்கள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கிரிப்டோகரன்சிகளுக்கு ஜனவரி 2022 நல்ல மாதமாக அமையவில்லை. ஏற்கெனவே கோவிட்-19 மாற்றுருவான ஒமிக்ரான் காரணமாக சந்தை இறங்குமுகமாக இருந்துவந்த நிலையில், 2021ல் இதே நேரத்தில் இருந்த நிலைக்கு எதிர்மாறாகத் தொடர்ந்து விழ ஆரம்பித்தது. மாதத் தொடக்கத்தில் $2.2 டிரில்லியனில் இருந்த மொத்த கிரிப்டோ சந்தை மூலதனம் மாதமுடிவில் $1,.75 டிரில்லியனாகக் குறைந்தது. இது 20%க்கும் அதிகமான வீழ்ச்சி. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இறங்குமுகமாக இருந்தாலும், ஜனவரியில் எல்லா கிரிப்டோகரன்சிகளும் இதே போக்கினைத் தழுவவில்லை. ஜனவரி 2022ல் சிறப்பாகவும் மோசமாகவும் செயல்பட்ட சில கிரிப்டோகரன்சிகள் குறித்துப் பார்க்கலாம்.
ஜனவரி 2022ல் நன்றாகச் செயல்பட்ட நாணயங்கள்
எதேரியம் ஃபேன் டோக்கன் (Ethereum fan token) (EFT)
ஜனவரி முழுவதும் சிறப்பாக செயல்பட்டு பொதுவான போக்கினைத் தீவிரமாக எதிர்த்துப் போராடிய ஒன்றென்றால் அது ETH ஃபேன் டோக்கன் தான் (EFT). பினான்ஸ் ஸ்மார்ட்செயினை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரிப்டோ, மக்களுக்கு எதேரியம் பிளாக்செயினின் சாதகங்களை BSC-யில் தருவதை நோக்கமாகக் கொண்டது. இது டிசம்பர் மாத நடுவில் துவக்கப்பட்ட ஒரு புதிய டோக்கன். ஜனவரி மாத சரிவின்போதும் அசங்காமல் நன்கு நிலைப்படுத்திக் கொண்டிருந்தது. மாதத் தொடக்கத்தில் $0.000000000233 விலையில் தொடங்கி $0.00000002268 என்ற விலையில் முடிவடைந்தது. அதாவது 9,600%க்கும் மேல் எழுச்சி கண்டுள்ளது. உண்மையில், இந்தத் தோற்றம் EFT ஜனவரி 16ம் தேதி $0. 0000001642 என்ற உச்சத்தைத் தொட்ட பலனை மறைப்பதாக உள்ளது.
FTX டோக்கன் (FTT)
ஜனவரி மாதத்தில் நன்றாகச் செயல்பட்ட இன்னொரு கிரிப்டோகரன்சி FTX டோக்கன் (FTT). இது FTX கிரிப்டோ பெறுதிகளின் (derivatives) இயங்குதளத்தின் சொந்த டோக்கனாகும். இதுதான் இந்தப் பட்டியலில் உள்ள கிரிப்டோகரன்சிகளில் மிகப் பெரியது மட்டுமல்லாமல் நீண்டகாலம் தொடர்பவற்றில் ஒன்றாகவும் உள்ளது. 2019 கோடையில் துவக்கப்பட்ட இந்த கிரிப்டோ, 2022ன் முதல் மாதம் செழிப்பான காலகட்டமாக FTTக்கு அமைந்திருந்தது. $38.31 விலையில் தொடங்கி மாத முடிவில் $43.67 என்ற விலையில் நின்றது. இது கிட்டத்தட்ட 14% அதிகரிப்பு. இருந்தாலும் EFT அனுபவித்த வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இதுவொன்றும் அசாத்தியமான விலையேற்றம் இல்லைதான். சந்தை மூலதனப்படி முதல் 100 இடங்களுக்குள் உள்ள கிரிப்டோகரன்சிகளில் மிகச் சிறப்பாகச் செயல்படுபவற்றில் ஒன்றாக இருப்பதைக் காட்டுவதன் மூலம் சந்தை இயல்பு குறித்து இது எதையோ நமக்குச் சொல்கிறது.
ICHI
ஸ்டேபிள்காயின்கள் என்றால் அவை நிலையாக இருக்கக்கூடியவை என்றுதான் அர்த்தம். எனவே அவை ஒழுங்காகச் செயல்படும் பட்சத்தில் அவற்றில் பெரியளவில் நகர்வுகளை நீங்கள் பார்க்க முடியாது. இன்னொரு புறம், ஒரு தனிப்பட்ட ஸ்டேபிள்காயினை உற்பத்திசெய்யும் ஒரு வலைத்தொடர்புடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சியானது அதிகளவு பீதியைக் கிளப்பாதபடி மேலும் கீழும் தாராளமாக நகரக்கூடியது. இப்படியான ஒன்றுதான் ICHI. Ichi.org என்ற வலைப்பக்கத்துக்குச் சொந்தமான இந்த நாணயம் ஒரு வலைத்தொடர்பாகும். இது மக்கள் தங்கள் சொந்த ஸ்டேபிள்காயின்களை உருவாக்க உதவுகிறது. 2021 கோடைகாலத்தில் சந்தைக்கு வந்த இந்த நாணயம், இந்த ஜனவரி மாதத்தில் சந்தைப் போக்கைச் சிதறடிக்கக்கூடிய அளவில் காளையோட்டத்தைக் காட்டியுள்ளது. மாதத் தொடக்கத்தில் $5.21 என்ற விலையில் இருந்து மாத இறுதியில் $17.63 என்ற விலையில் முடிவடைந்தது. இந்த செயல்திறன் முதல் 500 கிரிப்டோகரன்சிகளில் ஒளிரும் நட்சத்திரமாக இந்த கிரிப்டோகரன்சி இருப்பதற்கு வழிவகுத்தது.
Telos (TLOS)
ஜனவரி 2022ல் பொதுவான போக்குக்கு மாறாக ஏற்றம் கண்ட இன்னொரு டோக்கன் Telos (TLOS). 2019ல் துவக்கப்பட்ட இந்த நாணயம் தனக்கென வரலாற்றில் ஓரிடத்தைப் பெற்றுள்ளது. இதன் சொந்த டோக்கன் TLOS. ”Web 3.0வுக்கான பிளாக்செயின் செயற்தளம்” என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் Telos எதேரியம் மெய்நிகர் எந்திரத்தின் அதிவேகப் பதிப்பு என்ற வாக்குறுதியையும் அளிக்கிறது. Web3 ஏற்படுத்திய பரபரப்பும் சலசலப்பும் ஜனவரியில் TLOSக்கு உதவியிருக்கிறது. அத்துடன் துவக்க விலையான $0.5845-லிருந்து $0.9184க்கு சென்று, 57%க்கும் அதிகமான ஏற்றத்தைக் கண்டு தனது முதலீட்டாளர்களுக்கு இந்த நாணயம் வெகுமதி அளித்துள்ளது.

ஜனவரி 2022ல் மோசமாகச் செயல்பட்ட நாணயங்கள்
பிட்காயின் (BTC)
ஜனவரி 2022ல் மோசமாகச் செயல்பட்ட கிரிப்டோக்கள் குறித்து நாம் பேசும்போது, பிட்காயினை நாம் குறிப்பிட்டாக வேண்டும். எண்களைக் கொண்டு பார்த்தால், பிட்காயின் மோசமாகச் செயல்பட்ட கிரிப்டோ இல்லை என்பது உண்மைதான். ஆனால் BTC என்பது நடைமுறையில் ஏற்கப்பட்ட ஒரு தரநிலையாக இருப்பதால் பிட்காயின் எப்படிச் செயல்படுகிறதோ அது ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சி சந்தையையும் பாதிக்கும். அதன் தாக்கத்தை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. எளிமையாகச் சொல்வதென்றால், BTC மிக மோசமான செயல்பாட்டைக் கொடுத்தது. மாதத் தொடக்கத்தில் $46,311.74ல் தொடங்கி முடிவில் $38,483.13 என்ற விலையில் நின்றது. இது கிட்டத்தட்ட 17% விலை வீழ்ச்சி. இருந்தாலும் ஜனவரி 24ல் $33,184.06 என்ற இன்ட்ராடே விலைக்குச் சரிந்து அதன் பிறகு சிறிதளவு ஏறி இந்த நிலையில் முடிவடைந்ததைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
What is your sentiment on BTC/USD?
ஈதர் (ETH)
பிட்காயினின் சிறந்த எதிரி ஈதர். இதற்கும் ஜனவரி மோசமானதாகவே இருந்தது.பிட்காயினில் இருந்து இதன் விலை நகர்ந்து வந்தாலும், அது கீழ்நோக்கியதாகத்தான் இருந்தது. ஜனவரி 1ல் இதன் வர்த்தக விலை $3,683.05 ஆக இருந்தது. ஆரம்பத்தில் சற்று மேல்நோக்கி நகர்ந்தாலும், விரைவில் சரிந்து மாத முடிவில் $2,688.28 விலைக்கு வந்தது. இது 25%க்கும் அதிகமான வீழ்ச்சி.
GALA
மொத்தத்தில் பெரியளவிலான கிரிப்டோகரன்சிகளுக்கு ஜனவரி மோசமான காலகட்டமாகத்தான் இருந்தது. ஏன் 2021 முழுவதும் செழிப்பைக் கண்ட சம்பாதிக்க-விளையாடு உலகத்திலும் கூட சந்தையின் சரிவை உணரமுடிந்தது. விளையாடுவதன் மூலமாக மக்களை கிரிப்டோகரன்சியை ஈட்ட அனுமதிக்கும் விளையாட்டுக்கான இயங்குதளமான GALA-வும் மோசமாக அடிவாங்கியது. ஆண்டின் துவக்கத்தில் $0.4515ல் ஆரம்பித்து ஜனவரி 31ல் $0.198 விலைக்கு இறங்கியது. ஜனவரி மாதத்தில் மட்டும் 56%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
Axie Infinity (AXS)
ஜனவரி 2022ல் சம்பாதிக்க-விளையாடு கிரிப்டோக்களில் அடிவாங்கியது GALA மட்டுமல்ல. Axie Infinity, பிலிப்பைன்ஸ் மக்களுக்கு துணை வருமானமாக விளையாடுவதன் மூலம் வருவாயைப் பெறும் வாய்ப்பளிக்கிறது என்று அறிக்கைகள் 2020ல் வர ஆரம்பித்தபின் மிகப்பெரிய சம்பாதிக்க-விளையாடு கிரிப்டோகரன்சியாக உருவெடுத்தது. இந்தச் செய்தியினால் கிரிப்டோவெர்ஸ் விலை நகர்ந்தாலும், எப்படிப் பரவலான மக்களால் விளையாடிப் பணம் சம்பாதிக்க முடிகிறது என்பது நிரூபணமாகவில்லை. இத்தோடு சேர்ந்து ஒரு ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநரால் எழுதப்பட்ட இந்த அசல் அறிக்கையும் ஒரு காரணம். இந்நிறுவனம் சம்பாதிக்க-விளையாடு விளையாட்டுக்களை வழங்கவும் இவற்றுக்குப் பின்னாலுள்ள நிறுவனங்களுக்கு பத்திரிகை வெளியீடுகளை வழங்கவும் செய்கிறது. நாணயம் 2021ல் நன்றாகச் செயல்பட்டது. ஆனால் ஜனவரியில் விழத்தொடங்கியது. மாதத் தொடக்கத்தில் $93.30 என்று ஆரம்பித்து பின் கிட்டத்தட்ட 43% விழுந்து $52.28க்கு முடிவடைந்தது.
LUNA
அடிவாங்கிய இன்னொரு பெரிய கிரிப்டோ LUNA. இது தென் கொரியாவைச் சேர்ந்த டெரா வலைத்தொடர்பின் சொந்த நாணயம். மிகப்பெரிய மையமில்லா நிதியில் ஒன்றாக அல்லது DeFi நாணயங்களில் ஒன்றாக LUNA பார்க்கப்பட்டு வந்தாலும், ஜனவரி இறக்கத்தை இந்தக் காரணங்கள் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை. துவக்கத்தில் $85.51ல் வர்த்தகத்தைத் தொடங்கி சில ஏற்றங்களைக் கடந்தது. மாதத் தொடக்கத்தின் சில நாட்களுக்கு $90க்கு மேலும் சென்றது. பின்னர் விலை ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் உடனடியாகவும் இறங்கி மாத இறுதியில் $52.34க்கு வந்தது. ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 40% இழப்பு. LUNA-வின் இதுவரையிலான உச்ச விலை டிசம்பர் 27ல் அது $103.33-ஐத் தொட்டதுதான். அத்துடன் ஒப்பிட்டால் எந்தளவு இறங்கியுள்ளது என்பதை நாம் பார்க்க முடியும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த கிரிப்டோகரன்சிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது?
இந்தக் கேள்விக்கு உண்மையில் பதில் இல்லை. இது பிரகாசம் என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள் என்பதையும், எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் பொறுத்தது. இதையும் ஞாபகத்தில் வையுங்கள் – கிரிப்டோ விலைக் கணிப்புகள் பெரும்பாலும் தவறானவை; உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்; விலை ஏறவும் அதேபோல இறங்கவும் கூடும்.
2022ல் எந்த கிரிப்டோவில் ஏற்றம் இருக்கும்?
திரும்பவும் சொல்கிறோம். இந்தக் கேள்விக்கு பதிலே இல்லை. ஏனெனில் எங்களுக்கே அது தெரியாது. அதற்கான இயல்பான திறனுள்ள கிரிப்டோக்கள் பல உள்ளன. ஆனால் கிரிப்டோகரன்சியின் வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால் நிச்சயமாக உறுதியளிக்கப்பட்ட நாணயங்களின் தோல்விகளாலும், எங்கிருந்து வந்ததென்றே தெரியாதவை முக்கியமானவையாக மாறிப் போகும் ஆச்சரியங்களாலும் நிறைந்திருக்கிறது. உதாரணமாக யாரால் DOGE அத்தகையதொரு சிறப்பான ஒன்றரையாண்டுகளைத் தர முடியுமென்று ஊகித்திருக்க முடியும்? அல்லது யார்தான் பிட்காயின் புதிய உச்சங்களைத் தொடும் என்றும் பின் சில மாதங்களுக்குள் விலை பாதியாகக் குறையுமென்றும் எதிர்பார்த்திருக்க முடியும்?
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?
இருக்கக்கூடும். தற்போதைக்கு நாம் சரிவில் இருந்தால், குறைவான விலையில் நன்கு செயல்படக்கூடிய ஒரு நாணயத்தை, கைவசம் வைத்திருப்பதற்கான நேரமாக இருக்கலாம். இன்னொருபுறம், சந்தை எப்படி மீளப் போகிறது, எத்தனை விரைவாக அது நிகழும் அல்லது உண்மையில் அப்படி எழுமா என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும். அத்துடன் விலை ஏறவும் இறங்கவும் செய்யுமென்பதையும், நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.