முகநூலின் மெட்டாவெர்ஸ்: அடுத்து என்ன நடக்கும்?

By Currency.com Research Team

முகநூல் மெட்டாவெர்ஸில் மிகுந்த முனைப்பைக் காட்டுகிறது. தனது பெயரை மெட்டா என்றும் மாற்றியுள்ளது. அடுத்து என்ன நடக்கும்?

உள்ளடக்கம்

இந்த நேரத்தில் தொழில்நுட்பத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒன்று மெட்டாவெர்ஸ்: எந்தளவு பரபரப்பானது என்றால் முகநூல் கூட தனது பெயரை மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் என்று மாற்றிக் கொண்டுள்ளது.

முகநூலின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க் கூறுவது என்னவென்றால், இந்த மாற்றத்துக்குக் காரணம் “முகநூல் முதலில் என்ற அடிப்படையிலிருந்து நாங்கள் மெட்டாவெர்ஸ் முதலில் என்பதற்கு மாறுகிறோம்”. எனவே முகநூல் தலைகீழாக மெட்டாவெர்ஸுக்குள் குதிக்கிறது. இதிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

மெட்டாவெர்ஸ் விளக்கம்

முதலில் இந்த ‘மெட்டாவெர்ஸ்’ என்ற பதத்திலுள்ள சில குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ‘தி மெட்டாவெர்ஸ்’ என்பதில் உள்ள ‘தி’ இதன் இதயத் துடிப்பாக, ஒரு கருத்தாக்கமாக உள்ளது. இதன் மையக் கருத்து என்னவென்றால், எதிர்காலத்தில் ஒரே மெய்நிகர் உலகத்தில் அனைத்து மனிதர்களும் ஒருவருக்கொருவர் தங்களது சொந்த அவதார்கள் மூலம் தொடர்புகொள்வதுதான்.

இந்தக் கருத்தாக்கம் சில காலமாகவே சுற்றி வருகிறது. இந்தப் பதம் 30 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளர் நீல் ஸ்டீஃபன்சனின் `ஸ்நோ கிராஷ்` என்ற நாவலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மெய்நிகர் யதார்த்த தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸின் அதி முக்கியமான பகுதியாகும்.

எனினும், நீங்கள் ஏற்கெனவே கவனித்திருக்கலாம்` இத்தகைய ஒற்றை இராஜ்ஜியம் இன்னும் வரவில்லை. இன்னொருபுறம், பல சிறிய இணைய உலகங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சொந்த அவதார்களின் மூலம் தொடர்புகொள்கின்றனர். இந்த இடங்கள் மெட்டாவெர்ஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

மெட்டாவெர்ஸ்கள் தற்போது கிரிப்டோ வட்டத்தில் பெரிய வணிகமாக உள்ளது. Sandbox, Decentraland போன்றவை மிகவும் பிரபலமான உலகங்கள். இவை பிளாக்செயினில் உள்ள டிஜிட்டல் ஓவியத்தின் பிரத்யேகத் துண்டுகளான தனித்துவமான டோக்கன்களுடன் (NFTகள்) சொத்துக்களை வாங்கவும் விற்கவும் வாய்ப்பளிக்கின்றன. 

2003ல் தொடங்கப்பட்ட Second Life போன்ற இணையவழி அனுபவங்கள், 2009ல் தொடங்கப்பட்ட Minecraft போன்ற மிகப்பெரிய ஊடாட்ட விளையாட்டு உலகங்கள் எல்லாம் புதியவை அல்ல. ஆனால் இப்போது வந்திருக்கும் மெட்டாவெர்ஸ் எனும் அலை இப்பரப்பை புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. பொதுவாக மெட்டாவெர்ஸ்களின் கலவை மெட்டாவெர்ஸ் என்றே குறிப்பிடப்படுகிறது.

முகநூல்: ’மெட்டா’வுக்குச் செல்கிறது

2021 அக்டோபரில் முகநூல் நிறுவனம் – இது முகநூல் என்ற சமூக ஊடகத் தளத்தை மட்டும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை; மற்றவற்றுடன் சேர்த்து இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது -தனது பெயரை Meta Platforms Inc அல்லது சுருக்கமாக மெட்டா என்று பெயர் மாற்றம் செய்தது. 

முகநூலின் மெட்டாவெர்ஸ் தொடர்பான விசயங்களை நாம் பார்க்கும்முன், கிரிப்டோ வெளியில் மெட்டாவும் முகநூலும் என்ன செய்துள்ளன என்றும் நாம் பார்க்க வேண்டும்.

Diem ஸ்டேபிள்காயின் மக்கள் முகநூலில் கொள்முதல் செய்ய அனுமதிக்கும் ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கும் முயற்சியாக இருந்தது. இதற்கான பிளாக்செயின் அமைப்பு 2018ல் ஏற்படுத்தப்பட்டது. லிப்ரா அசோசியேஷன், முகநூலையும் இன்னபிற பெரிய வணிகங்களையும் கொண்டு இந்த நாணயத்தை இயக்குவதாக இருந்தது. 

எனினும் 2019 அக்டோபரில், விசா, மாஸ்டர்கார்டு, பேபால், புக்கிங் ஹோல்டிங்ஸ், ஈபே போன்ற பெயர்கள் செயல்திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டன.

இந்த கிரிப்டோ 2020ல் துவங்கும் நோக்கில் லிப்ரா என்றே முதலில் அழைக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியான ஒழுங்குமுறை சவால்களைச் சந்தித்தபின், முகநூலில் இருந்து தூரமாகிக் கொள்வதற்காக தனது பெயரை மாற்றிக் கொண்டது.

2021ல் ஒரு முகநூல் கிரிப்டோ வாலெட் வெளியானது. ஆனால் கடைசியில் Diem-ஆல் ஒழுங்குமுறை தடைகளைத் தாண்டமுடியவில்லை. 2022 துவக்கத்தில் இது $162 மில்லியனுக்கு சில்வர்கேட் கேபிடலுக்கு விற்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பின் அடிப்படையில் இந்த டோக்கனை திரும்ப துவக்கும் நோக்கில் சில்வர்கேட் உள்ளது.

மெட்டா எனும் மெட்டாவெர்ஸ்: சுருக்கமான வரலாறு

2014ல் முகநூல் Oculus மெய்நிகர் யதார்த்தத்தை வாங்கியபோது மெட்டாவெர்ஸுக்குள் தனது கால்விரல்களை நனைத்துக் கொண்டது. 2019ல் முகநூல் தனது சொந்த மெய்நிகர் தலையணியை (headset) வெளியிட்டது.

2021 துவக்கத்தில் மெட்டா என்று பெயர் மாற்றும் முன்பாக ஸக்கர்பெர்க் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “மக்கள் எங்களை முதன்மையாக ஒரு சமூக ஊடக நிறுவனமாகப் பார்ப்பதிலிருந்து மெட்டாவெர்ஸ் நிறுவனமாகப் பார்ப்பதை நோக்கி திறம்பட நகர்வோம் என்று நினைக்கிறேன். இன்று மக்கள் பயன்படுத்தும் செயலிகள் எங்கிலும் நாங்கள் செய்துவரும் அனைத்து வேலைகளும், சமூகத்தையும் படைப்பாளிகளையும் உருவாக்கும் இந்தத் தொலைநோக்குப் பார்வையை நோக்கிச் செலுத்துவதில் பங்களித்துள்ளன.

“இதில் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். இதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏகப்பட்ட விசயங்களில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த துறையிலும் நாங்கள் செய்ய இருக்கும் பணிக்கான அடுத்த அத்தியாயத்தின் பெரும் பாகமாக அது இருக்குமென்று நினைக்கிறேன்.”

2022 பிப்ரவரி 15ல் ஸக்கர்பெர்க் ஒரு முகநூல் பதிவில் மெட்டா என்பது “ஒரு மெட்டாவெர்ஸ் நிறுவனம்.” என்று அறிவித்தார். இதற்கு வழிநடத்தக்கூடிய நான்கு விழுமியங்கள் இருந்தன. அவை: “விரைந்து நகர்தல்”, “நீண்டகால தாக்கத்தில் கவனம்”, “அருமையான விசயங்களை உருவாக்குதல்”, “எதிர்காலத்தில் வாழ்தல்”.

இந்த கலைச்சொற்கள் வலிமையான மெட்டாவெர்ஸுக்கு வழிவகுக்குமா, பயனர்களிடம் நிறையபேர் ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2021ன் நான்காம் காலாண்டில் அன்றாடம் முகநூலுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை 1.929 பில்லியனாக இருந்தது (மூன்றாம் காலாண்டில் 1.93 பில்லியனில் இருந்து சற்று குறைந்துள்ளது). எனவே பெருமளவில் வாடிக்கையாளர்கள் முகநூல்/மெட்டா மெட்டாவெர்ஸுக்கு வரும் சாத்தியம் இருக்கும் வேளையில், மெட்டாவெர்ஸை இன்னும் நிறையபேர் எடுத்துக் கொள்ளவில்லை.

What is your sentiment on META?

186.92
Bullish
or
Bearish
Vote to see community's results!

Statista கூற்றுப்படி மெட்டாவெர்ஸின் Web3 மறு உபயோகத்தில் 50,000 பயனர்கள் மட்டுமே உள்ளனர். இது மெட்டா தனது பயனர் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும் அல்லது இந்தக் குறிப்பிட்ட துறையில் மேலும் பொதுவான அழுத்தம் தேவை என்பதையே காட்டுகிறது.

மெய்நிகர் vs நிதிசார் எதார்த்தம்?

மெட்டாவெர்ஸின் இலாபமீட்டும் திறன் குறித்து, குறைந்தது குறுகிய கால அளவில் சில கவலைகள் உள்ளன. மெட்டா தனது சமீபத்திய நிதி விபரங்களை 2022 பிப்ரவரியில் வெளியிட்டபோது, அதில் மிகவும் கவனத்துக்குரிய செய்தியாக இருந்த ஒன்று, மெட்டாவின் மெட்டாவெர்ஸ் பணி அதிகளவில் பண இழப்பைச் சந்தித்து வருவது தான்.

The Reality Labs (RL) கிளை பெரியளவில் மெய்நிகர் யதார்த்தம் தொடர்பான நுகர்வோர் வன்பொருள், மென்பொருள் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை தொடர்பாக 2021ல் $10.1 பில்லியன் இழப்பைப் பதிவுசெய்தது. இது 2020ல் ஏற்பட்ட $6.6 பில்லியன் நட்டத்தைவிட அதிகம். நிறுவனம் மெட்டாவெர்ஸ் மேம்பாட்டில் முதலீடு செய்து வருவதாகக் கூறியது.

மெட்டா ஏற்கெனவே $10 பில்லியனை தனது மெட்டாவெர்ஸில் செலவிட்டுள்ளது. எனினும் பிப்ரவரி துவக்கத்தில் வந்த சமீபத்திய முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மெட்டா தனது சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்துள்ளது. 2020 நான்காம் காலாண்டில் $11.2 பில்லியனாக இருந்த அதன் நிகர இலாபம் 2021ல் $10.2 ஆகக் குறைந்துள்ளது. இந்தவகை முதலீடு தொடருமா என்று பார்ப்பது சுவாரசியமானது.

ஒரு புதிய விசயமா அல்லது இன்னொரு செகண்ட் லைஃப் தானா?

மாபெரும் இணைய உலகம் குறித்த யோசனை கிட்டத்தட்ட செகண்ட் லைஃப் (Second Life) உடன் கடந்துவிட்டது. புளூம்பெர்க்குக்கு அளித்த பேட்டியில் தொழில்நுட்ப எழுத்தாளர் வாக்னர் ஜேம்ஸ் அவு, மார்க் ஸக்கர்பெர்க்கின் மெட்டாவெர்ஸ் உடன் இணைப்புகள் இருந்ததாகக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: “மெட்டாவெர்ஸ் குறித்து நான் பார்த்துள்ள எந்தக் கதையும், ஏற்கெனவே செகண்ட் லைஃப்பில் நடந்ததுக்கு நிகரானதுதான்.

“மெட்டாவெர்ஸ் ரியல் எஸ்டேட் வளர்ச்சி குறித்துச் சொல்கிறீர்களா? ஆம். அது நிச்சயம் நடந்தது. மிகப்பெரிய நிறுவனங்கள் மெய்நிகர் தலைமை அலுவலகங்களைத் திறப்பது குறித்துச் சொல்கிறீர்களா? ஏகப்பட்ட Fortune 500 நிறுவனங்கள் செகண்ட் லைஃபில் இடங்களைத் திறந்து வைத்தன.”

தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதை அவு ஒப்புக்கொள்கிறார். அதாவது மெட்டாவெர்ஸ் என்பது அதி நவீன சாதனத்தில் முதலீடு செய்துள்ள மக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மீச்சிறு செயல்பாடாக இனி இருக்காது.

அவு குறிப்பிட்ட ஒரு முக்கியமான விசயம், முகநூலின் மெட்டாவெர்ஸ் கடக்க வேண்டிய சவால்களில் ஒன்று அதன் பயனர்களின் வயது. அதிகளவில் மெட்டாவெர்ஸைப் பயன்படுத்துபவர்கள் வளரிளம் பருவம் முதல் 20களின் தொடக்கத்தில் உள்ளவர்களாக உள்ளனர். கிட்டத்தட்ட 24 வயதை அடைந்ததும் அவர்கள் அடிக்கடி வலைத்தொடர்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறார்கள்.

இதற்கும் மேலான வயதுடையவர்களிடையில் இந்த அமைப்பை மேலும் கவர்ச்சிகரமானதாக எப்படி மெட்டா மாற்றப்போகிறது என்று பார்ப்பது சுவாரசியமானது, அப்படி ஒன்று நடந்தால். 

மெட்டாவெர்ஸ் நாணயங்களுக்கு தற்செயல் ஊக்குவிப்பு

முகநூலின் மெட்டா என்ற பெயர்மாற்றம் “மரபான” மெட்டாவெர்ஸ் கிரிப்டோகரன்சிகளுக்கு உதவியிருக்கிறது. JP Morgan அறிக்கைப்படி, மெட்டா அறிவிப்பு வெளியானதும் மெட்டாவெர்ஸ் கிரிப்டோக்களின் சந்தை மூலதனம் அதிகரித்தது. Decentraland-ன் விலை ஆறு மடங்குக்கு மேல் அந்நேரத்தில் உயர்ந்தது. அக்டோபர் 28ல் $0.7535 ஆக இருந்த விலை அக்டோபர் 31 இன்ட்ராடே வர்த்தக உச்ச விலையாக $4.69ஐத் தொட்டது.

மெட்டா செயல்திட்டம் MANA, SAND போன்றவற்றின் எதிர்கால விலைகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். 

இறுதியாகச் சில எண்ணங்கள்

நிச்சயம் சில நியாயமான தடைகள் முகநூல்/மெட்டாவுக்கு உள்ளன. சமூக ஊடகம் இருந்ததைப் போல பெரியதொரு நிகழ்வாக மெட்டாவெர்ஸ் உருவாக அவற்றைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

தலையில் VR தலையணியை மாட்டிக் கொள்வதால் கேம்ஸ் விளையாடுவதாக அர்த்தமில்லை என்று மக்களை மெட்டா வசப்படுத்த வேண்டியுள்ளது. பெருந்தொற்றுக்குப் பிறகான உலகில் தலையணியை அணியும்போது ஒருவகையில் மூச்சுத் திணறடிக்கும் பணி அனுபவத்தை, மேலும் வசதியானதாக, மேலும் உகந்ததாக, மேலும் அனுபவிக்கத்தக்கதாக, மேலும் திறனுள்ளதாக அது மாற்ற வேண்டியுள்ளது.

மேலும் இப்போதிருக்கும் யதார்த்தத்தை மாற்றும் முயற்சியாக இதைச் செய்யவில்லை என்று மக்களுக்கு மறு உறுதிப்பாட்டையும் அது அளிக்க வேண்டியுள்ளது. மக்களது தகவல்கள் உண்மையிலேயே பாதுகாப்பானது; அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்றும் மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே பெண்கள் மீது பாலியல் வன்முறையும், ஏன் “வன்புணர்வும்” மெட்டாவெர்ஸில் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

மெட்டாவும் அதன் வணிகங்களும் பிளாக்செயினை உண்மையாக நம்பக்கூடியவர்களால் அரதப் பழையதாகப் பார்க்கப்படலாம். ஏனெனில் “உண்மையான” Web3 மெட்டாவெர்ஸ் என்று விவரிக்கப்படுவதைப் பயன்படுத்தும்படி அவர்கள் ஊக்கப்படுத்த வேண்டியிருக்கும். இது குறைந்தது சித்தாந்த ரீதியாக செயல்பாட்டுக்கு வரும்போது மையமில்லாத ஒன்றாக இருக்கும்.

இந்த மாற்று வடிவங்கள் மேலும் பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். ஆனால் இந்த மாதிரி சமாச்சாரங்களைப் பொறுத்தவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மெட்டாவிடம் அதன் மெட்டாவெர்ஸுக்கான திட்டங்களைச் சுருக்கமாக விவரிக்குமாறு கேட்டோம். ஆனால் இதுவரை பதிலில்லை. 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முகநூல் மெட்டாவெர்ஸுக்கு மாறுகிறதா?

இல்லை. சமூக ஊடகத் தளத்துக்குப் பின்னால் உள்ள நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று 2021ல் மாற்றியதை ஒட்டி சில குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். முகநூல் முன்பு இருந்ததைப் போலவே அதேவழியில் பெரியளவில் தொடர்ந்து இயங்கும். இதற்கிடையில், மெட்டா தனது மெட்டாவெர்ஸ் செயல்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

மெட்டாவெர்ஸ் யதார்த்தத்துக்கு மாற்றாக அமையுமா?

நீங்கள் ஒரு திகில் நாவலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்காதவரை இது நடக்கப் போவதில்லை. மக்கள் இப்போதும் சாப்பிடவும், நீர் அருந்தவும், சமூகத்துடன் ஊடாடவும், மெட்டாவெர்ஸில் செய்யமுடியாத அனைத்து வகையான விசயங்களையும் செய்ய வேண்டியுள்ளது.

பச்சையாகச் சொல்வதென்றால், மெட்டாவெர்சில் நீங்கள் உடலுறவு கொள்ள முடியாது. வேறெதற்கும் இல்லாவிட்டாலும் மனித சந்ததியின் எதிர்காலத்துக்காக உண்மையான உலகம் தொடர்ந்து இயங்கும். மேலும் முக்கியமாக, மெட்டாவெர்ஸ் படிப்படியாக பலமிழந்து ஒன்றுமற்று முடியக்கூடும்.

மெட்டாவெர்ஸ் குறித்து நம்பமுடியாத அளவு உற்சாகத்தில் இருப்பவர்களிடையில் கூட, JP Morgan அறிக்கையைச் சுட்டிக் காட்டுவது அர்த்தமுள்ளது. அது சொல்கிறது: ”மெட்டாவெர்ஸின் சாத்தியங்கள் குறித்து அதிக உற்சாகம் இருந்தாலும், ஈடுபடுவதில், சமூகத்தைக் கட்டமைத்தல், சுய வெளிப்பாடு, வணிகம் ஆகியவற்றில் அது தனது முழு இயல்திறனையும் செயல்படுத்துவதற்கு மேலும் மேம்படுத்தவும் முதிர்ச்சியடையவும் வேண்டியுள்ளது.”

முடிவாக, மெட்டாவெர்ஸ் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது மற்றும் நாம் வசிப்பதற்கான யதார்த்த உலகம் இங்கே இருக்கிறது.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image