உறுப்புகள் இல்லாத உடல்: பாலியல் வன்முறையும் மெட்டாவெர்ஸில் பெண்களும்
யதார்த்த வாழ்க்கையைப் போல, மெட்டாவெர்ஸில் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதற்கும், தாக்குதலுக்கும் ஆளாகும் நிலையுள்ளதா?

உள்ளடக்கம்
- மெட்டாவெர்ஸ் பாலியல் தாக்குதல் வழக்குகள்
- பாதிக்கப்பட்டவர் மீது பழிபோடுதல்
- VRChat தவறாடல்: மெட்டாவெர்ஸின் அபாயங்கள்
- தொழில்நுட்பமும் உடல்சார் எல்லை மீறல்களும்
- இறுதியாக சில சிந்தனைகள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
UK-யில் ஐந்தில் ஒரு பெண் வன்புணர்வுக்கு அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்ற தரவுப்படி பார்க்கையில் ஆணாதிக்க வன்முறை எதிரொலிக்கும் இடமாக மெட்டாவெர்ஸ் ஆகியுள்ளதோ என்று கருதுவது மட்டுமின்றி அதைவிட மோசமான விளைவுகளை நோக்கித் தள்ளுமோ என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மென்மேலும் மெட்டாவெர்ஸ் பயனர்கள் முன்வந்து, இயங்குதளங்களைப் பயன்படுத்தி மெய்நிகர் துழாவல், மெய்நிகர் வன்புணர்வு உட்பட பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் குறைகளைச் சொல்லும்போது இத்தகைய வெளிகள் பெண்களுக்கு, உண்மையில் குழந்தைகளுக்கு எந்தளவு பாதுகாப்பானவை என்ற கேள்வியை எழுப்புவதுடன் நாம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்கு சட்டதிட்டங்கள் இன்றி, இத்தகு வெளிகளுக்குள் என்ன நிகழ்கிறது என்பது குறித்த சாட்சிப் பதிவுகளோ இல்லாமல் இருக்கும் நிலையில் மெட்டாவெர்ஸ் வழங்கும் சாத்தியங்களைக் கொண்டு குற்றவாளிகள் எளிதாக ஊடுருவவும் பிற பயனர்களை ஏய்க்கவும் முடியுமென்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
அத்துடன் VR தொழில்நுட்பமானது மென்மேலும் வசதியானதாக மாறிவரும் காலத்தில், அதிகளவு உண்மைத் தோற்றமும் பாதிப்பூட்டும் அனுபவங்களையும் பயனர்களுக்கு வழங்குவது அதிகரித்து வருவதால் மெய்நிகர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவோர் மீதான தாக்கம் மேலும் அதிர்ச்சியூட்டும் அனுபவமாக மாறிவருகிறது. உதாரணமாக ஒரு பெண் தொடுபுலன் உள்ளாடை அணிந்திருந்தபோது அவரது மார்பை இன்னொருவர் துழாவிய பயங்கர அனுபவத்தை நினைவுகூர்ந்தார். முழுக்கவே உணர்திறனுள்ள உடல் ஆடைகள் கூடியவிரைவில் வரும் சாத்தியமுள்ள நிலையில், மெட்டாவெர்ஸில் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாவதன் தாக்கம் மேலும் இடர் கொண்டதாக ஆக்குகிறது.
மெட்டாவெர்ஸ் நிறுவனங்களால் பெண்களையும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சமூக உறுப்பினர்களையும் பாதுகாப்பது சாத்தியமா? ஒரு குற்றம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? உங்கள் அவதாரத்தை மற்றொரு பயனர் தாக்கினால் அதற்கான சட்டரீதியான செயல்பாடுகள் என்ன? மெட்டாவெர்ஸில் உள்ள "நீங்கள்" என்பது யதார்த்த வாழ்வில் உங்கள் அடையளத்தோடு சட்டப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளதா?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன், வெளிச்சத்துக்கு வந்துள்ள சில வழக்குகளை ஆராயலாம்.
மெட்டாவெர்ஸ் பாலியல் தாக்குதல் வழக்குகள்
மெட்டாவெர்ஸின் பாலியல் தாக்குதல்களில் முதலாவது வழக்கு நவம்பர் 26 அன்று பதிவானது. மெட்டாவின் மெய்நிகர் இயங்குதளமான Horizon Worlds-ல் ஒரு பெண் பீட்டா சோதனையாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்.
இந்த நிகழ்வு குறித்து பீட்டா சோதனையாளர் கூறியதாவது, “வழக்கமான இணையத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது சாதாரண ஒன்றல்ல. ஆனால் இதில் VR என்ற ஒரு படிமமும் சேர்ந்துகொள்ளும்போது அது நிகழ்வினை மேலும் தீவிரமானதாக்குகிறது. நேற்று இரவு நான் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதோடு அங்கே இருந்த மற்றவர்களும் இந்த நடத்தைக்கு ஆதரவு தெரிவித்ததால், பிளாஸாவில் (மெய்நிகர் சூழலின் மையக் கூடுகை வெளி) தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.”
இந்த நிகழ்வு விளையாட்டு உலகுக்குப் புதிதல்ல. 2016ல், ஒரு பெண் பயனாளர் Quivr என்றழைக்கப்படும் வில் மற்றும் அம்பை கொண்ட ஸோம்பி விளையாட்டை விளையாடும்போது அவர் மார்பு சீண்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஜோர்டான் பெலாமைர் மீடியம் இல் பகிரங்கக் கடிதமாக இந்த நிகழ்வு குறித்துச் சொல்லும்போது நினைவுகூர்ந்ததாவது, “ஸோம்பிகள் மற்றும் பிசாசுகள் அலையலையாக வந்துகொண்டிருப்பதற்கு இடையில், நான் BigBro442 என்பவருக்கு அடுத்து எங்களது அடுத்த தாக்குதலுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். திடீரென BigBro442 இன் உடலற்ற ஆவிரூப தலைக்கவசம் என்னைப் பார்த்தபடி நின்றது. அவனது மிதக்கும் கை என் உடலை அணுகியது. ஆவிரூபத்தில் என் மார்பைத் தேய்க்கத் தொடங்கினான். `நிறுத்து!` என்று கத்தினேன்… இது அவனை மேலும் தூண்டிவிட்டது. அவனிடமிருந்து நான் திரும்பிக் கொண்டாலும், என்னைத் துரத்திப் பிடித்து என் மார்புக்கு அருகில் பற்றுவது போல கிள்ளுவதுபோல சைகைகளைச் செய்தான். மேலும் தைரியமடைந்து என் மெய்நிகர் பெண்குறியை நோக்கிக் கையால் தேய்க்கவும் தொடங்கினான்.”
மனநல மருத்துவர் நினா ஜேன் படேல் இவ்வாறு மூழ்கடிக்கும் அனுபவங்களின் உளவியல் தாக்கம் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். இவரும் Horizon Worlds-ல் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். மீடியம் இல் இதுகுறித்து நினைவுகூறும்போது: “இணைந்த 60 நொடிகளில் சொற்கள் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன். ஆண் குரல்களுடன் இருந்த மூன்று அல்லது நான்கு ஆண் அவதார்கள் மாயரூபத்தில் (மெய்நிகரில்) என் அவதாரைக் கூட்டு வன்புணர்வு செய்து அதை புகைப்படங்களும் எடுத்தார்கள் – நான் வெளியேற முயன்றபோது அவர்கள் “உனக்குப் பிடிக்காத மாதிரி நடிக்காதே” என்று கத்தினார்கள்.
செயற்தளத்தில் இதேபோன்ற அனுபவங்களைப் பெற்ற எண்ணற்ற பிற பாதிக்கப்பட்டோரும் அவரை அணுகியதாகவும் படேல் தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்டவர் மீது பழிபோடுதல்
Horizon Worlds-ன் துணைத் தலைவர் விவேக் சர்மா இத்தகைய பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் குறித்துச் சொல்லும்போது “முழுக்கவே துரதிர்ஷ்டமானது” என்றார்.
பீட்டா சோதனையாளர் கையால் சீண்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட உள் சீராய்வு, பயனர் `பாதுகாப்பு மண்டலம்` என்றழைக்கப்படும் கருவியை இயக்கியிருக்க வேண்டும் என்று சொல்கிறது. செயற்தளம் வழங்கும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான “பாதுகாப்பு மண்டலம்” பயனரைச் சுற்றிலும் ஒரு வளையத்தை உருவாக்குகிறது. இதன் அர்த்தம் அந்த அம்சத்தை நீக்காதவரை யாரும் பயனருடன் தொடர்புகொள்ளவோ அல்லது பேசவோ முடியாது.
சிலர் மெட்டாவின் (Meta) பதிலை விமர்சிக்கின்றனர். இத்தகு நடத்தையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வது பாதிக்கப்பட்டவரின் பொறுப்பாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். இந்த உலகத்தை டெவலபர் உருவாக்குகிறார்: தாக்குதல் குறித்த புகார்கள் மீதான பொறுப்பை இயங்குதளம் ஏற்க வேண்டுமா? தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் குற்றஞ் செய்வோரைத் தண்டிக்கவும் ஒரு வழியை ஏற்படுத்தும்படி இயங்குதளங்கள் வலியுறுத்தப்படுமா? அவர்களிடம் அதற்கான வளங்களோ அல்லது பணவசதியோ உள்ளதா?
இதற்கு மாற்றாக பாதிக்கப்படக் கூடியவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏதாவது நடந்தால், இந்தப் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தாத காரணத்தால் அது பாதிக்கப்பட்டவரின் தவறாகிவிடுமா?
பாதிக்கப்பட்டவர் மீது பழிபோடுதல் மீதான விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் கிரிஸ்டினா மிலன் டெக்னாலஜி ரிவ்யூ-வுக்குக் கூறியதாவது: “Horizon Worlds-ல் ஒவ்வொருவரும் எளிதில் கண்டறியத் தக்க பாதுகாப்புக் கருவிகளைக் கொண்டு நேர்மறையான அனுபவத்தைப் பெற நாங்கள் விரும்புகிறோம்… எங்கள் UI-ஐ நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவதுடன், எங்கள் கருவிகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்ற நல்ல புரிதலையும் வளர்த்துக் கொள்வோம். இதனால் பயனர்கள் எளிதாகவும் நம்பிக்கையுடனும் புகாரளிக்க முடியும். எங்கள் இலக்கு Horizon Worlds-ஐ பாதுகாப்பானதாக ஆக்குவதுதான். இந்தப் பணியைச் செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”
VRChat தவறாடல்: மெட்டாவெர்ஸின் அபாயங்கள்
மெட்டா ஆப் ஸ்டோரில் உள்ள சமூகச் செயலியான VRChat மூலம் சிறார் தவறாடல்களையும் ஆபாச விஷயங்களையும் பார்க்க நேரிடுவதாக தீவிரமான குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதுவும் மெட்டாவெர்ஸ் அபாயங்கள் குறித்த பெருங்கவலைகளை எழுப்பியுள்ளது.
Centre for Countering Digital Hate நடத்திய ஓர் ஆய்வில் 12 மணிநேரத்துக்கும் குறைவான காலத்தில் மெட்டாவின் கொள்கைகளில் குறைந்தது 100 மீறல்கள் கண்டறியப்பட்டன. சிறார்கள் அதீத ஆபாசம், வம்பிழுப்பு, இனப்பாகுபாடு, மோசமான செய்திகள், சீண்டல்கள் ஆகியவற்றுக்கு ஆளாவது உள்ளிட்ட சிக்கல்களை ஆய்வு வெளிப்படுத்தியது.
Centre for Countering Digital Hate-ன் தலைமைச் செயல் அதிகாரி இம்ரான் அஹமது பதிலளிக்கையில் அவர் கூறியதாவது: “கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சமயத்தில் முகநூல் மெட்டாவெர்ஸை Oculus-க்காக ஆரம்பித்தபோது, அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தனியுரிமையும் பாதுகாப்பும் மெய்நிகர் யதார்த்தத்தின் இதயமாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.
“ஆனால் எங்கள் ஆய்வாளர்கள் அவரது வாக்குறுதிகளுக்கு எதிரான விசயங்களைக் கண்டறிந்துள்ளனர். மெட்டாவெர்ஸ் வெறுப்பு, பாலுணர்வுக் கதைகள், குழந்தைகளிடம் தவறான நடத்தை ஆகியவற்றின் புகலிடமாக உள்ளது. எங்கள் ஆய்வில் மெட்டாவெர்ஸ் பயனாளர்களை ஒருவருக்கொருவர் இணைக்க மட்டுமல்ல கூட்டான வேட்டைக்காரர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவும் பயன்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் காட்டுகிறது. மெட்டாவெர்ஸ் வேட்டைக்காரர்களுக்கு பாதுகாப்பானது எனில், பயனாளர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று அர்த்தம்.”
தொழில்நுட்பமும் உடல்சார் எல்லை மீறல்களும்
இத்தாலிய எதிர்கால வாதிகள் முதல் டெலூஸ், குவாட்டாரி போன்ற பின் நவீனத்துவ அரசியல் கருத்தியலாளர்கள் வரை எண்ணற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கோட்பாட்டாளர்கள், எப்படி வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் உடல் சுரண்டல், ஊடுருவல், சிதைத்தல் ஆகியவற்றில் புதிய வழிகளைக் கொண்டு வருகின்றன என்று ஆராய்ந்துள்ளனர். ஆபாசக் கதையெழுதுபவர்கள் புகைப்படம், சினிமா, காணொளி, இணையம் ஆகியவற்றின் புதிய தொழில்நுட்பங்களை உடனடியாகச் சுரண்டலுக்கு உட்படுத்துகிறார்கள். தொழில்நுட்பத்துக்கு மனித உடல், ஆன்மீகம் மற்றும் தார்மீக எல்லைகள் ஆகியவற்றில் எல்லை மீறலில் உள்ள தொடர்பு புதிய நிகழ்வு அல்ல தான்.
உண்மையில் தொழில்நுட்பமும் மனிதன் தனிமைப்படுத்தப்படுவதும் அடிக்கடி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
இணையத்தின் காரணமாக எளிதில் அணுகக்கூடிய ஆபாசக் கதைகள் மூலம் கணக்கின்றி பெருகிக் கிடக்கும் படங்கள் தாராலமாக விநியோகிக்கப்பட்டு நேரடியாக தன்னையும் மற்றவர்களையும் ஒரு பொருளாகக் கருதும்படி ஊக்கப்படுத்துகின்றன. இதனால்மற்றவர்களுடன் நாம் தொடர்புகொள்ளும் விதத்தை டிஜிட்டல் உலகம் தீவிரமான சிக்கல் நிறைந்ததாக ஆக்க முடியும்.
பிரெஞ்சு தத்துவவியலாளர் கில்லெஸ் டெலூஸ், அவருடன் பணிபுரியும் ஃபெலிக்ஸ் குவாட்டாரி ஆகியோர் உடலின் மாய உருவை விவரிக்க முயற்சிக்கையில் “உறுப்புகளற்ற உடல்” என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றனர். உயிருள்ள அமைப்பிலிருந்து உடல் சுதந்திரமடைந்து புறவயமாகும் நிலையை இது குறிக்கிறது. மனமும் உடலும் துண்டாகும் நிலையைத் தோற்றுவிப்பதற்கு ஒரு சரியான உதாரணமாக ஒருவரின் அவதாரைச் சொல்லலாம்.
ஜேஜி பல்லார்டு எழுதிய கிராஷ் (Crash) என்ற நாவலில், கதைசொல்லியும் முன்பு விபத்தில் பாதிக்கப்பட்டு அந்நியமாகிவிட்ட குழுவினரும் பிரபலங்களுடன் கார் விபத்தைத் திரும்ப நிகழ்த்தும் குரூரமான கற்பனாவாதத்துக்குள் செல்கின்றனர். மிக வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல், தீவிர வன்முறை, சிற்றின்பம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் பாலுணர்வும் உடல்சார் புரிதலும் வக்கிரமான விதத்தில் திரிபடையச் செய்யமுடியும் என்பதை சிறப்பாக இந்நாவல் பிரதிபலிக்கிறது.
மெட்டாவெர்ஸின் எழுச்சி மனிதர்கள் எளிதில் தங்களை மனிதத்தன்மை அற்றவர்களாகும் புதிய வழிகளை உருவாக்கக்கூடும். தனிநபர்கள் இனி பிற மனிதர்களுடன் உரையாடப் போவதில்லை. ஆனால் காவலில்லாத மாயவெளியில் திரியும் அவதார்களுடன் தான் உரையாடப் போகிறார்கள்.
இறுதியாக சில சிந்தனைகள்
சில விமர்சகர்களால் வலதுசாரியத்தின் உச்ச வெளிப்பாடாக, தாராளமயச் சந்தை, நியோ-முதலாளித்துவச் சித்தாந்தமாக கிரிப்டோகரன்சிகள், குறிப்பாக பெரிய தொழில்நுட்பங்கள் பொதுவாகப் பார்க்கப்படுகின்றன.
ஆனால் தொழில்நுட்பங்களின் எழுச்சியின் பலன்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இதுவரையிலும் அவை உலகச் சமூகத்தில் பொருளாதாரச் சமனின்மை முதல் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் வரை ஏற்கெனவே உள்ள சமநிலையற்ற தன்மையை மேலும் மோசமடையச் செய்திருக்கின்றன. இந்தச் சமனின்மைகளுக்கு கிரிப்டோகரன்சிகள் இருந்துவரும் அதிர்ச்சியூட்டும்படி கொண்டாடப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத சட்டகத்திலிருந்து உதவி கிடைக்கவில்லை.
Centre for Countering Digital Hate-ன் அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி மெட்டாவெர்ஸ், தெளிவாகவே அதிக அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது. எப்படி இதை ஆளும் அமைப்புகளால் சமூக ஊடகச் செயற்தளங்களில் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சில மேம்பாடுகள் இதுவரை செய்யப்பட்டிருந்தாலும், அனைத்துப் பயனாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதில் மெட்டாவெர்ஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்தால் அது சந்தேகத்துக்குரியதே.
முடிவாக, மெட்டா மற்றும் பிற மெட்டாவெர்ஸ் தளங்களும் மூலதன நோக்கிலான நிறுவனங்களே. இவற்றின் முதன்மையான செயல்பாடும் இலக்கும் தனிநபர்களின் பாதுகாப்பு அல்ல. பங்குதாரர்களின் வருவாயைப் பெருக்குவதே. எனவே தங்கள் VR செயற்தளங்களின் அடித்தளங்களை நிறுவும்போது நெறிசார் தேர்வுகளை இவை கருத்தில் கொள்ளும் என்று எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
அதேவேளையில், முழுக்கவே குறைபாடான சட்டதிட்டங்கள் கொண்ட தேசிய உலகளாவிய அதிகார மையங்கள் கட்டுப்பாடற்ற மெய்நிகர் உலகில் நிகழ்வதை ஆளவும் காவல் காப்பதற்காகவும் பெருந் தொழில்நுட்பங்களின் பெருக்கங்களைக் கையாள முயற்சிப்பதும் சாத்தியமற்றதே.
சட்டப்பூர்வ எல்லைகளும் ஒரு அவதார் என்பது அவதாருக்குப் பின்னால் உள்ள நபரைக் குறிக்கிறதா என்பதில் தெளிவற்றதாக உள்ளன. பெருந் தொழில்நுட்ப நிறுவனங்களும் எப்போதும் போல பொறுப்பற்றதாக உள்ளன. இந்நிலையில் தனிநபர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தங்களுக்குத் தாங்களே மெய்நிகர் உலகில் பொறுப்பை எடுத்துக் கொள்வதும் அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதும் தான்.
எதுவும் தவறாக நடந்தால் பாதிக்கப்பட்டவரைப் பழிபோடுவதில் இது சேருமா என்பது விவாதத்துக்கு உரியது. மெட்டாவெர்ஸ் கட்டுப்படுத்தமுடியாத வன் மேற்காக யாரையும் பொருளாகப் பார்ப்பதை ஊக்குவிப்பதாகவும் வன்முறையையும் பொதுவான எல்லைகளை மீறுவதுமாகவும் இருந்தால், மெய்நிகர் வெளியில் ஈடுபடுவதிலுள்ள அபாயத்தை எடுப்பதன் விளைவுகளுக்கான பொறுப்பு கடைசியில் தனிநபர்கள் தலையில்தான் விழும். ஆனால் கேமிங்கின் அனைத்து பிரச்சினைகளும் சமூக ஊடகத்தின் பிரச்சினைகள் மற்றும் இணையத்தில் எல்லை மீறும் உள்ளடக்கப் பிரச்சினைகளுடன் உருகியிணைந்து இருப்பதால் நாள்பட்ட சிக்கல்களின் கலவையை இது உருவாக்கக்கூடும்.
Countering Digital Hate-ல் பழி கூறும் அறிக்கையில் அறியக் கிடைத்தபடி, முடிவாக அகமது பெற்றோர்கள் தாங்கள் வாங்கிய எந்தவொரு VR உபகரணத்தையும் திருப்பியனுப்பவும், குழந்தைகள் இத்தகு செயற்தளங்களில் ஈடுபடுவதைத் தடைசெய்யவும் பரிந்துரைக்கிறார். இது மெட்டாவெர்ஸ் கலப்படமில்லாத கேளிக்கையையும் விளையாட்டுகளையும் வழங்கும் நோக்கத்திலிருந்து மைல் கணக்கான துரத்தில் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சமூக நோக்கில் எண்ணிலாத அபாயங்கள் மெட்டாவெர்ஸில் உள்ளன. பாலியல் தாக்குதல் முதல் விளையாட்டில் எல்லை மீறும் வன்முறை வரை, குழந்தைகளைத் தவறாக நடத்துதல் போன்ற விசாரணை தேவைப்படக்கூடிய எண்ணற்ற அபாயங்களுக்கு வாய்ப்புள்ளன.
மெட்டாவெர்ஸ் என்பது தனிநபர்களுக்கான மெய்நிகர் உலகம். இது மெய்நிகர் யதார்த்த (VR) தலைமாட்டிகளைப் பயன்படுத்தியும் உணர்திறனுள்ள கையுறைகளைக் கொண்டும் மற்ற பயனர்களுடன் விளையாட்டுக்களை ஆட அல்லது வசன உரையாடலில் ஈடுபடச் செய்கின்றன.
அது உங்களைப் பொறுத்தது. நீங்கள் ஒரு பெண் என்றால் மெட்டாவெர்ஸுக்குப் போவதில் ஆர்வமாய் இருந்தால், நீங்கள் அசௌகரியமாக உணரத்தக்க நிகழ்வு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு பாதுகாப்புக் கருவிகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மெட்டாவெர்ஸைப் பயன்படுத்த விரும்பும் குழந்தையின் பெற்றோராக இருந்தால் சாத்தியமுள்ள அபாயங்களையும் அவற்றை எப்படிக் குறைப்பது என்றும் பார்க்க வேண்டும்.