Pi வலைத்தொடர்பு என்றால் என்ன? உங்கள் ஆகச்சிறந்த வழிகாட்டி

By Currency.com Research Team

Pi வலைத்தொடர்பு, மைனிங்கை மக்கள் திரளுக்குக் கொண்டுவர விரும்புகிறது. அது வெற்றியடையுமா?

Pi வலைத்தொடர்பு எதைப் பற்றியது?                                 
Pi வலைத்தொடர்பு ஆட்டத்தை மாற்றுமா அல்லது உலர்ந்து வாடிப் போகுமா? – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

சமீபத்தில் Pi வலைத்தொடர்பு பரபரப்பையும் கருத்து முரண்பாட்டையும் சம அலவில் ஏற்படுத்தியுள்ளது. Pi வலைத்தொடர்பு (PI) என்றால் என்ன? அது எதற்குப் பயன்படுகிறது? Pi வலைத்தொடர்பு எப்படி இயங்குகிறது?

Pi வலைத்தொடர்பு விளக்கம்

Pi வலைத்தொடர்பு, மைனிங் செயல்பாட்டை திரளான மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மரபான பணிச்சான்று முறைப்படி புதிய கிரிப்டோ நாணயம் உருவாக்குவதில் அது ஏகப்பட்ட அளவு மின்சாரத்தை எடுப்பதால் தேவையற்ற கவனத்தைப் பெற்று வருகிறது. PI விண்மீன் கருத்தொற்றுமை நெறிமுறை (stellar consensus protocol) என்றழைக்கப்படும் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இது வலைத்தொடர்பிலுள்ள முனையங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட பயனர்கள், விநியோகிக்கப்பட்ட பேரேட்டில் பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்தவும் கருத்தொற்றுமையை அடைந்து புதிய பரிவர்த்தனைகளை பேரேட்டில் பதியவும் அனுமதிக்கிறது.

இந்த முனையங்கள் வலைத்தொடர்பின் பயனர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்த மூன்று, ஐந்து நம்பிக்கையான நபர்களுக்கிடையில் குழுக்களை உருவாக்குகிறது. பின்னர் இவை ஒரு வலைத்தொடர்பைக் கட்டமைக்கிறது (குறைந்தது கருத்தளவில்). இதனால மோசடியான பரிவர்த்தனைகள் நிறுத்தப்படுகின்றன. காரணம் நம்பகமான முனையங்கள் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த முடியும்.

இதிலுள்ள இன்னொரு வேறுபாடு என்னவென்றால் இந்த கரன்சி கைபேசி செயலி மூலம் மைனிங் செய்யப்படுகிறது. இது அதிகளவு மின்சாரத்தை எடுக்கக்கூடும் என்பது போலத் தோன்றினாலும், Pi வலைத்தொடர்புக்குப் பின்னுள்ளோர்  அப்படியல்ல என்று பதிலளிக்கின்றனர். அவர்கள் சொல்வதாவது: “Pi உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நம்பகமானவர்களாக சான்றுரைப்பதன் மூலம் அதன் பேரேட்டைப் பாதுகாக்கிறது. இது இடையில் பிணைக்கப்பட்ட ‘பாதுகாப்பு வளையங்களை’ உருவாக்குகிறது. இதன் மூலம் யார் பரிவர்த்தனைகளை நிறைவேற்ற முடியும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்தப் புதுமையான அணுகுமுறையினால் உங்களிடமுள்ள சமூக இணைப்புகளை ஆக்கத்துடன் பயன்படுத்தி, எந்த நிதிச் செலவுமின்றி, மின்கலத்தைக் காலியாக்காமல், பிரபஞ்சத்தில் எடுத்து வைக்கும் மெல்லடியைப் போல உங்கள் கைபேசி மூலம் கிரிப்டோ மைனிங் அனுமதிக்கப்படுகிறது.”

Pi வலைத்தொடர்புக்குள் நான்கு வகைப் பயனர்கள் உள்ளனர்:

 • முன்னோடிகள். இவர்கள் Pi வலைத்தொடர்பு கைபேசிச் செயலியை தினந்தோறும் பயன்படுத்துபவர்கள். தாங்கள் இயந்திரமல்ல என்பதை உறுதிசெய்து Pi வலைத்தொடர்பு கிரிப்டோகரன்சியை மைனிங் செய்கிறார்கள். பிற முன்னோடிகளிடமிருந்தும் இவர்கள் பரிவர்த்தனைகளைக் கோரலாம்.
 • பங்களிப்பாளர்கள். இவர்கள் செயலியைப் பயன்படுத்தி தங்களுக்குத் தெரிந்த, நம்பகமான முன்னோடிகளின் பட்டியலைத் தயாரிக்கிறார்கள்.
 • தூதுவர்கள். இவர்கள் புதிய பயனர்களை Pi செயலிக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
 • முனையங்கள். இவர்கள் முன்னோடிகளாகவும் பங்களிப்பாளர்களாகவும் செயல்படுகிறார்கள். ஆனால் இவர்கள் PI முனைய மென்பொருளை தங்கள் கணினிகளில் இயக்குபவர்களாகவும் இருப்பர். நாம் பார்த்ததுபோல, பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்தவும், அவ்வாறு செய்ய உதவும் நம்பகமான வலைத்தொடர்பை உருவாக்குவதற்கும் இவர்கள் பொறுப்பேற்கிறார்கள்.
Pi வரலாறு

நிகோலஸ் கோக்கலிஸ், செங்டியாவோ ஃபேன் ஆகியோரால் PI நிறுவப்பட்டது. கோக்கலிஸும் ஃபேனும் அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர்கள். கோக்கலிஸ் கணினி அறிவியலிலும் ஃபேன் மானுடவியல் கணக்கீட்டிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். Pi வலைத்தொடர்புக்கான கருத்தாக்கம் 2019ல் முதலில் உருவானது. அந்த ஆண்டில் இதற்கான செயலி தோற்றுவிக்கப்பட்டது. 2020ல் இதன் testnet உருவாக்கப்பட்டதுடன் செயலூக்க முன்னோடிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

2021 ஜூன் இறுதியிலிருந்து செப்டம்பர் இறுதி வரையிலும் Pi முதல் கணினி நிரல் ஒத்துழைப்பு நிகழ்வான #BuildPi2gether-ஐ நடத்தியது. இது “முன்னோடிகளும் உருவாக்குநர்களும் இணைந்து Pi-யின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒத்துழைப்பு நிகழ்வு”. இது சூழலமைப்பு மற்றும் வணிகச் செயலிகள் வகைகளில் முன்னணிச் செயல்திட்டங்களுக்கு $100,000 மற்றும் 100,000 PI வெகுமதியளித்தது.

நவம்பர் 25ல், Pi வலைத்தொடர்பு 29 மில்லியன் பயனர்களைத் தாண்டிவிட்டதாகக் கூறியது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 61,120 முன்னோடிகள் வலைத்தொடர்பில் இணைகிறார்கள். டிசம்பர் இறுதியில் mainnet தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இதை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் (2022 ஜனவரி 31), இந்த நாணயம் எந்தச் சந்தையிலும் பட்டியலிடப்படவில்லை.

PI கிரிப்டோகரன்சி

வெளிப்படையான வர்த்தகத்துக்கு இது கிடைக்காதென்பதால், Pi வலைத்தொடர்பு கிரிப்டோகரன்சி (PI) வரம்புக்குட்பட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மக்களால் இதை வாங்க, விற்க அல்லது பரிமாறிக்கொள்ள முடியாவிட்டால், எந்த கிரிப்டோவுக்கும் மிகப் பொதுவான பயன்பாடான இச் செயல்பாட்டிலிருந்து விதி விலக்கானதாகிறது. எனினும் மக்களால் Pi வலைத்தொடர்பின் சரியிணை சந்தையிடத்தில் பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும். எனவே இதற்கென சில வரம்புக்குட்பட்ட பயன்பாடு இருக்கத்தான் செய்கிறது.

நாணய வழங்கலைப் பொறுத்தவரை, இது 100,000 பயனர்களை எட்டியதும்  PIயின் மைனிங் வீதம் ஒரு மணி நேரத்துக்கு 1.6 நாணயங்கள் ஆக பாதியாக்கப்பட்டது. பயனர் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியதும் இது திரும்பவும் மணிக்கு 0.4 PI ஆக பாதியாக்கப்பட்டது. 10 மில்லியனை எட்டியபோது மேலும் ஒருமுறை மணிக்கு 0.2 PI ஆக பாதியாக்கப்பட்டது. ஒரு பில்லியன் பயனர்களை எட்டும்போது பாதியாக்கம் தொடர்ந்து பூஜ்ஜியம் PI ஆக முடியும். இந்தப் பாதியாக்கம் பற்றாக்குறையையும் டோக்கனின் மதிப்பையும் அதிகரிப்பதற்காகச் செய்யப்படுகிறது. ஆரம்பகட்ட பயனர்கள் பின்னர் வந்தவர்களைவிட அதிகளவு PI வழங்கலை அணுக முடியும். பரிந்துரைகளுக்கும், உருவாக்குநர்களுக்கும் வெகுமதியும் உண்டு.

PI இப்போதும் சந்தைகளில் கிடைக்கப்பெறவில்லை
PI இப்போதும் சந்தைகளில் கிடைக்கப்பெறவில்லை – புகைப்படம்: Shutterstock

PI கிடைக்கும் தன்மை

2021 டிசம்பர் 28ல் mainnet நேரலைக்கு வந்திருந்தாலும் Pi வலைத்தொடர்பு இன்னும் சந்தைகளில் பட்டியலிடப்படவில்லை. அதாவது நாணயமானது திறந்த சந்தைக்கு இன்னும் வரவில்லை. இதனால் PIயின் விலை என்னவென்றோ, என்னவாக இருக்கக்கூடுமென்றோ, கிரிப்டோ சந்தைக்குள் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு அது எப்படி எதிர்வினையாற்றுமென்றோ நமக்கு சுத்தமாகத் தெரியாது. இது போக்குகளைப் பின்தொடரும் கிரிப்டோகரன்சியா அல்லது அவற்றைப் புறக்கணித்துச் செல்லுமா என்று நமக்குத் தெரியாது.

சில PI விலைக் கணிப்புகள் இருந்தாலும், எப்போதும் துல்லியமாக இல்லாவிட்டாலும் வழக்கமாக சீராக இருக்கக்கூடிய சூத்திர அடிப்படையிலான முன்னறிவிப்புகளின் இடத்தை ஊகங்கள் நிரப்புவதால் ஏகப்பட்ட உறுதியற்ற தன்மை காணப்படுகிறது. உதாரணமாக WalletInvestor தனது PI விலைக்கணிப்பில் இவ்வாறு கூறுகிறது: “இந்த கரன்சி 2017-12-24 முதல் சில காரணங்களுக்காக புதுப்பிக்கப்படவில்லை: தரவு இல்லை அல்லது கிரிப்டோகரன்சி இரத்தாகியிருக்கலாம்.” ஆனாலும் PI விலை 0.007077 ஆக இருக்கக்கூடுமென்று சொல்கிறது. ஆனால் இது வெறும் ஊகம் மட்டுமே.

PI குழுவினர் தற்போதைக்கு இந்த நாணயத்துக்கு எந்த மதிப்புமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதாவது: “இன்று PI மதிப்பு 2008ல் பிட்காயின் இருந்ததைப் போல கிட்டத்தட்ட 0 டாலர்கள்/யூரோவாக உள்ளது. PI-யின் மதிப்பு வலைத்தொடர்பிலுள்ள பிற உறுப்பினர்கள் வழங்கும் நேரம், கவனம், பொருள் மற்றும் சேவையினால் தாங்கப்படுகிறது. எங்கள் கவனத்தையும், பொருட்கள் மற்றும் சேவைகளையும் ஒரு பொதுவான கரன்சியில் செலுத்துவதன் மூலம், வழக்கமாக வங்கிகளுக்கும், தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் (உதாரணமாக முகநூல், அமேசான்) மற்றும் பிற இடைநிலையர்களுக்குச் செல்லும் அதிகளவிலான மதிப்பு Pi உறுப்பினர்களுக்குச் சேருகிறது.

“இன்று இந்த டிஜிட்டல் கரன்சிக்கான உள்கட்டுமானத்தையும் சந்தையிடத்தையும் கரன்சியை விநியோகித்தும், சமூகத்தைக் கட்டமைத்தும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியும் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.”

தொழில்நுட்பமும் பாதுகாப்பும்

Pi வலைத்தொடர்பு ICO நடத்தவில்லை
Pi வலைத்தொடர்பு ICO நடத்தவில்லை – புகைப்படம்: Shutterstock

இவர்களது மிகப்பெரிய பலன்களில் ஒன்றாக உள்ள – Pi வலைத்தொடர்பு செயலி தேவையில்லாமல் கைபேசி மின்கலத்தைக் காலியாக்காது – கூற்று முறையாகச் சோதிக்கப்படவில்லை. எனினும் மைனிங் என்பது பொதுவாக பணிச்சான்று கருத்தொற்றுமை மூலம் கிரிப்டோ உருவாக்கப்படுவதைக் குறிக்கும்போது இது Piக்குப் பொருந்தாது. ஒருசில இணையத் தொடர்புகள் Pi செயலியினால் மின்கலப் பிரச்சினைகள் வருவதாகக் கூறினாலும், அவை நடைபெறவில்லை என்றோ அல்லது மிக முக்கியமாக எதிர்காலத்தில் நடைபெறாது என்றோ அர்த்தமாகாது. கைபேசி இயக்க அமைப்புகளின் தர மேம்படுத்தல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், புதிய அமைப்பில் செயலிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதும் புதிதல்ல. இது Pi செயலிக்கு நடக்கும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை; ஆனால் இதை மனதில் கொள்வது நல்லது.

தனது டோக்கனுக்கு ஆரம்பகட்ட நாணய வழங்கலைச் செய்யப்போவதில்லை என Pi வலைத்தொடர்பு சொல்கிறது. இதன் அர்த்தம் நீங்கள் PI ICO என்று பார்த்தால் அது மோசடி என்று புரிந்துகொள்ளுங்கள். அதன் டுவிட்டில்: “சூழலமைப்பில் பங்கேற்பதன் மூலம் Pi தாராளமாக மைன் செய்யப்படுகிறது. மைன் செய்யப்பட்ட அனைத்து PI-யும் Pi செயலிக்குள் இருந்துமட்டுமே பெறமுடியும். வேறு வழிகளில் Pi பெறலாமென்று ஏதேனும் இணையதளம் கூறினால் அது போலியானது. Pi தனது சொந்த பிளாக்செயினில் (அதற்கென உள்ள கால அளவுக்கு) இயங்குகிறது. எனவே வெவ்வேறு செயின்களில் விற்பனை அல்லது உரிமை மாற்றம் என்பது மோசடியானது.”

மோசடி குறித்த கவலைகள்

Pi வலைத்தொடர்பே ஒரு மோசடி என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வலைத்தொடர்பின் இணையதளம் இதைக் கடுமையாக மறுக்கிறது. அது சொல்வதாவது: “Pi என்பது ஒரு மோசடியல்ல. இது கிரிப்டோகரன்சியை மேலும் நன்றாக மக்கள் அன்றாடம் அணுகுவதற்காக ஸ்டான்ஃபோர்டு பட்டதாரிகள் குழு மேற்கொண்ட நேர்மையான முயற்சி.

“Pi-யின் முக்கிய குழுவானது இரண்டு ஸ்டான்ஃபோர்டு PhD பட்டதாரிகளாலும் ஒரு ஸ்டான்ஃபோர்டு MBA பட்டதாரியினாலும் வழிநடத்தப்படுகிறது. இவர்கள் அனைவருமே ஸ்டான்ஃபோர்டு பிளாக்செயின் சமூகத்தை உருவாக்க உதவியுள்ளனர். இந்தச் செயல்திட்டம் வெற்றியடையும் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தரமுடியாது. எனினும், மிக உயர்ந்த நெறிகளைப் பேணும் அதேசமயம், எங்களுக்குள் பகிர்ந்துகொண்ட கனவை நனவாக்க முடிந்தவரை கடுமையாகப் பணியாற்றுவோம் என்று வாக்குறுதியளிக்கிறோம்.”

வியட்நாமைச் சேர்ந்த கிரிப்டோ வல்லுநரான டாங் மின் டுவான் இதற்கு எதிராக, “பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களையும், நேரத்தையும், கைபேசி வழங்களையும் ஏன் சாதனத்திலுள்ள கூடுதல் தகவல்களையும் இழக்கக்கூடும்” என்று கூறினார். “இவர்கள் சொல்லும் நம்பிக்கை வளையத்துக்குள் மற்றவர்களைக் கவர்ந்திழுக்க” பயனர்கள் எடுக்க வேண்டியிருக்கும் முயற்சி பிரமிடு திட்டத்தை ஒத்ததாக உள்ளது.

“செயல்திட்டத்துக்கு ஏற்கெனவே ஒரு கைபேசி செயலி மற்றும் பின்புல சேவையகமும் இருந்தால் (உண்மையான செயலாக்கத்தைச் செய்யும் சேவையகம்), அவர்கள் ஏன் மூல நிரலியை எல்லோரும் பார்க்கும்படி திறந்துகாட்டக் கூடாது?” என்று டுவான் கேள்வியெழுப்புகிறார்.

Pi வலைத்தொடர்புச் செயலியில் சமீபத்தில் விளம்பரங்களும் சேர்க்கப்பட்டன. எனவே இந்த மென்பொருளின் முதன்மையான நோக்கம் பயனர்களிடமிருந்து பணம் சம்பாதிப்பது என்பதைக் காட்டுகிறது. மக்கள் செயலியில் தங்கள் முழுப் பெயர், தொலைபேசி எண், முகநூல் விபரங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. புதிய பயனர்கள் ஏற்கெனவே உள்ள Pi பயனரின் பரிந்துரை குறியீடு மூலம் மட்டுமே பதிவுசெய்ய முடியும் என்பதும் இது ஏதோ பிரமிடு திட்டம் போன்ற கேள்வியை எழுப்புகிறது. இன்னொருபுறம், பயனர்கள் தங்களது சொந்த நேரடி வலைத்தொடர்புகளில் இருந்து மட்டுமே PI ஈட்ட முடியும்; தங்கள் இணைப்புகளின் வலைத்தொடர்புகளில் இருந்து பெறமுடியாது என்ற முறையும், பிரமிடு திட்டங்களைப் போல இயங்கக்கூடிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டங்களைப் போலவே இருக்கிறது. 

இங்கே ஓர் எச்சரிக்கைக் குறிப்பையும் சொல்லிவிட வேண்டும். எந்தவகையிலும் Pi வலைத்தொடர்பு ஒரு மோசடி என்று உறுதியாகச் சொல்லவில்லை. இருப்பினும், எந்த புதிய கிரிப்டோவாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். PI போன்ற கிரிப்டோகரன்சி மிகச்சிறந்த நோக்கங்களை மட்டும் கொண்டு ஆரம்பிக்கப்படலாம்; ஆனாலும் அவை தோல்வியுறவும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எல்லாம் இழந்து மோசடி நாணயத்தில் முதலீடு செய்திருந்தால் கிடைக்கக்கூடிய அதே பலனையும் கொடுப்பதற்கு முழுமையான வாய்ப்புள்ளது. இந்த நாணயம் ஒருவேளை சந்தைகளில் வர்த்தகமாகத் தொடங்கினால் அப்போது தான் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியும்.

பதிலில்லாக் கேள்விகள்

 • Pi வலைத்தொடர்பிடம் பின்வரும் கேள்விகளை நாங்கள் கேட்டோம்:
 • Pi வலைத்தொடர்பு நாணயத்தை எதற்குப் பயன்படுத்த முடியும்?
 • PI மதிப்பு என்னவாக இருக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?
 • தகுதியான முதலீட்டாளர்களுக்கு PI ஒரு மோசடியல்ல என்று மறு உத்தரவாதமளிக்க முடியுமா?
 • PI-ஐ மக்கள் வாங்கவும் விற்கவும் செய்யும்படி ஒரு சந்தையைத் திறக்கும் திட்டங்கள் உள்ளதா?
 • எப்போது சந்தைகள் PIஐ பட்டியலிடத் தொடங்கும்?
 • பயனர்கள் இணைவதற்கு ஏன் பரிந்துரை தேவைப்படுகிறது?
 • பயனர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களா? எப்படி?
 • Pi வலைத்தொடர்பு செயலியில் ஏன் விளம்பரங்கள் வருகின்றன?

இதுவரை பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைத்தால் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Pi வலைத்தொடர்பு எப்போது தொடங்கப்பட்டது?

Pi வலைத்தொடர்பு 2019ல் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் mainnet 2021 டிசம்பர் வரை தொடங்கப்படவில்லை. இதுவரை எந்தச் சந்தையிலும் இது கிடைக்கப்பெறவில்லை.

Pi வலைத்தொடர்பை உருவாக்கியது யார்?

Pi வலைத்தொடர்பு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக PhD பட்டதாரிகளான நிகோலஸ் கோக்கலிஸ், செங்டியாவோ ஃபேன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Pi வலைத்தொடர்பின் உரிமையாளர் யார்?

இது தங்கள் செயலியில் மைனிங் செய்வதால் டோக்கனைச் சொந்தமாக வைத்திருப்பவர்களா அல்லது அமைப்பின் நிறுவனர்களான நிகோலஸ் கோக்கலிஸ், செங்டியாவோ ஃபேன் ஆகியோரா என்பது நீங்கள் எப்படி அளவிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

Pi வலைத்தொடர்பு பாதுகாப்பானதா?

வலைத்தொடர்பின் இணையபக்கத்தின்படி, “பாதுகாப்பு வளையங்கள் முழுமையான நம்பிக்கை வரைபடத்தைக் கட்டமைத்து மோசமான நடத்தையாளர்கள் மோசடியான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதைத் தடுத்து கரன்சியை பாதுகாக்கிறது.”. இருப்பினும், நீங்கள் PI-யைப் பெற்றால், உங்கள் தனிப்பட்ட குறிச்சொல் விபரங்களை யாரும் பெறாமலிருப்பதை உறுதி செய்வது போன்ற வழக்கமான முன்னெச்சரிக்கைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் பெயர், தொலைபேசி எண், முகநூல் விபரங்கள் போன்ற குறிப்பிட்ட விபரங்களை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இது நீங்கள் கவலை கொள்ளக் காரணமாக அமையலாம்.

PI நாணயத்துக்கு எதிர்காலம் உள்ளதா?

இருக்கலாம். எனினும் அது வெளிச்சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கும் வரை உண்மையில் நம்மால் எதுவும் சொல்லமுடியாது. இப்போதும் அது ஒரு மோசடியாக இருக்கவோ அல்லது தோல்வியுறுவதற்கோ வாய்ப்புள்ளது. இன்னொருபுறம், இது ஒரு முறையான கிரிப்டோவாகவும் மிகப் பிரபலமானதாகவும் மாறலாம். இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இடைப்பட்ட வேளையில், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image