சேஃப்மூன் (SFM) என்றால் என்ன? உங்கள் ஆகச்சிறந்த வழிகாட்டி

By Currency.com Research Team

சேஃப்மூன் (SafeMoon) கடந்த ஆண்டில் உருவான பிரபலமான கிரிப்டோக்களில் ஒன்று. ஆனால் இதில் ஏதும் அபாயங்கள் உள்ளதா?

சேஃப்மூன் என்றால் என்ன? உங்கள் ஆகச்சிறந்த வழிகாட்டி                                 
சேஃப்மூன் சர்ச்சைக்குரிய வழியில் இயங்குகிறது – புகைப்படம்: Shutterstock
                                

உள்ளடக்கம்

சேஃப்மூன் கிரிப்டோகரன்சி 2021ல் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து அர்ப்பணிப்புள்ள பயனர் தளத்தைச் சேகரித்து வருகிறது. இந்த டோக்கன் ஏற்கெனவே இரு பதிப்புகளைக் கண்டுள்ளது. இதன் நோக்கம் சந்தை மாறியல்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட பத்திரமும் பாதுகாப்பும் கொண்ட கிரிப்டோகரன்சியை உருவாக்குவதாகும். சரி, சேஃப்மூன் (SFM) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? சேஃப்மூன் எதற்குப் பயன்படுகிறது?

சேஃப்மூன் எப்படி இயங்குகிறது

சேஃப்மூன் முதலில் சந்தைக்கு 2021 மார்ச்சில் வந்தது. சேஃப்மூனுக்குப் பின்னால் உள்ள சிந்தனை, மக்கள் தங்கள் டோக்கனை வைத்திருந்து தங்கள் முதலீட்டு மதிப்பு அதிகரிப்பதைக் (குறைந்தது கருத்தளவில்) காணச் செய்வதாகும். மக்கள் தங்கள் சேஃப்மூன் டோக்கன்களை விற்க முடிவெடுத்தால், அவர்களிடம் 10% விற்பனை வரி விதிக்கப்படும். ஆரம்பத்தில் இந்த வரியில் பாதி டோக்கன்தாரர்களிடம் விநியோகிக்கப்பட்டது. எஞ்சியவை எரிக்கப்பட்டன. எனினும் இப்போது வரிப்பணத்தில் 40% மறுவிநியோகம் செய்யப்பட்டும் 30% உரிமைமாற்றத் தொகுப்புக்கும் 20% எரிக்கப்பட்டும் 10% வளர்ச்சி நிதிக்கும் அனுப்பப்படுகிறது.

பரிவர்த்தனைகள் மீது வரிவிதிக்கப்படும் முறையிலும் பணம் மறுவிநியோகம் செய்யப்படுவதாலும், குறைந்தது கருத்தளவில், ஒருவர் உண்மையில் எதையும் வாங்காமல் கூட அவர்கள் வைத்திருக்கும் சேஃப்மூன் கிரிப்டோகரன்சி அளவு வளர்வதைப் பார்க்க முடியும். கூடுதலாக, ஒட்டுமொத்த விலை இறங்கும்போதும் உங்கள் டோக்கனை வைத்திருப்பதன் மூலமாகக் கூட நீங்கள் இலாபம் பார்க்கலாம். மென்மேலும் மக்கள் விற்கையில் நீங்கள் விற்காமல் இருந்தால், விரைவில் நீங்கள், குறைந்தது கருத்தளவில் கணிசமான இலாபத்தை எடுக்கத் தொடங்குவீர்கள்.

2021 ஆரம்பத்தில் சேஃப்மூன் ஏற்படுத்தப்பட்டது. இது பினான்ஸ் ஸ்மார்ட் செயினில் இயங்குகிறது. இதன் அர்த்தம், தொழில்நுட்ப ரீதியாகச் சொல்வதானால், இதை நாணயம் என்று சொல்வதைக் காட்டிலும் கிரிப்டோ டோக்கன் எனலாம். எனினும் இந்த இரு பதங்களும் ஒன்றுக்கொன்று மாற்றி பயன்படுத்தப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். சேஃப்மூன் என்ற பெயர், இதன் வெளிப்படையான பத்திரம், பாதுகாப்புடன் இணையவழி கிரிப்டோ சமூகங்களுக்கிடையில் “நிலவுக்குச்” செல்லும் பிரபல அழைப்பையும் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நாணயம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆய்வாளர் ஜான் கரோனி என்பவரால் நிறுவப்பட்டது. மக்களை நாணயத்தை வைத்திருக்க ஊக்கப்படுத்துவதன் மூலம் சந்தையின் மாறியல்பை எதிர்த்து நிற்கக்கூடிய மதிப்பைச் சேமித்து வைப்பது இதன் நோக்கமாகும்.

சில கவலைகள்

எனினும் சில கவலைகள் SFM நாணயம் குறித்தும் அதன் டோக்கன் பொருளாதாரம் குறித்தும் உள்ளன. நீண்டகாலம் இதை வைத்திருந்ததால் மக்களுக்கு கிரிப்டோகரன்சி வெகுமதிகள் கிடைக்குமென்பது போன்ஸி (ponzi) திட்டம் அல்லது குறைந்தது அதைப் போன்ற ஒன்றைப் போல உள்ளது. 2021 ஏப்ரலில் இந்த டோக்கன் CertiK மூலம் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் சேஃப்மூனில் 12 சிக்கல்கள் இருப்பதாக அது கண்டறிந்தது. அதன் addLiquidity செயல்பாட்டில் மையப்படுத்தப்பட்ட அபாயம் தொடர்பான மிகவும் கவனிக்கத்தக்க முக்கியமான சிக்கல் கண்டறியப்பட்டது.

இந்த தணிக்கையில் கண்டறியப்பட்டதாவது, கொடுக்கப்பட்ட போதிய நேரத்தில் ஓர் உரிமையாளர் முகவரியானது பெரியளவில் டோக்கன்களைச் சேர்க்க முடியும். அந்த முகவரியின் உரிமை வெளியில் உள்ளவரிடம் இருக்கலாம். இதனால் “கேடான விளைவுகள்” ஏற்பட வழிவகுக்கும். தணிக்கையாளர் இந்தச் செயலம்சத்தை ஒரு ஸ்மார்ட் ஒப்பந்தம் மூலம் மாற்றினால் உரிமை மாற்றத் தொகுப்பைப் பூட்டுவதற்கு உதவிகரமாக இருக்குமென பரிந்துரைத்துள்ளது. 

புழக்கத்தில் உள்ளதில் பாதியை கரோனி வைத்திருப்பதால், அவரால் அதை விற்கவோ அல்லது எரிக்கவோ முடியும் என்பதற்கு முழு வாய்ப்பும் உள்ளது. இதனால் நாணயம் மதிப்பில்லாததாக ஆகலாம். கரோனி இந்த உரிமைமாற்றத் தொகுப்பு அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிதியானது சேஃப்மூனை வர்த்தகம் செய்யும் சந்தைகளுக்கோ அல்லது எதிர்காலத் தயாரிப்புகளுக்கான நிதியாகவோ பயன்படுமென்றும் சொல்கிறார். 

உண்மையிலேயே சேஃப்மூன் நிலவுக்குச் செல்ல முடியுமா அல்லது அது நொறுங்கி எரிந்துபோகுமா?
உண்மையிலேயே சேஃப்மூன் நிலவுக்குச் செல்ல முடியுமா அல்லது அது நொறுங்கி எரிந்துபோகுமா? – புகைப்படம்: Shutterstock

ஒரு புதிய சகாப்தம்?

சேஃப்மூன் கிரிப்டோகரன்சிக்கு ஒரு டோக்கனாக ஒருவருடத்துக்கும் குறைவான வரலாறே உள்ளது. மற்ற பிற மீம் காயின்களைப் போல சேஃப்மூனும் ஒரு சென்டின் பின்னங்களாக உள்ளது. கிரிப்டோக்களுக்கிடையில் இதுவொரு பொதுவான இடமாக இருக்கையில், ஒரு டோக்கனுக்கு மிகக் குறைந்த விலை இருப்பது மக்களில் சிலரை அதில் முதலீடு செய்வதிலிருந்து விலகச் செய்யலாம்.

இந்தப் பிரச்சினை சேஃப்மூன் V2 தர மேம்பாடு 2021 டிசம்பரில் புழக்கத்துக்கு வந்தபோது நிவர்த்தி செய்யப்பட்டது. V2வில் இருந்த மிகப்பெரிய அம்சங்களில் ஒன்று பழைய SAFEMOON நாணயங்கள் தொகுக்கப்பட்டு புதிய SFM ஆக ஆக்கப்பட்டதுதான். இதன் விகிதம் 1000:1 ஆகும். அதாவது SAFEMOON வைத்திருந்தவர்களால் புதிய SFM நாணயத்துக்கு கைக்காசைச் செலவழிக்காமல் மாற்றும் வாய்ப்பளித்தது. 2022 பிப்ரவரி 21ன்படி, மொத்த வழங்கலான 1 டிரில்லியனில் 575 பில்லியன் SFM நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக SFM சுய அறிக்கை தெரிவிக்கிறது.

பழைய SAFEMOON நாணயத்துக்கான ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த டோக்கன் இப்போதும் சந்தைகளில் உள்ளது. இதன் அர்த்தம் இரு நாணயங்களும் குறிப்பிட்ட சந்தைகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்த இரு டோக்கன்களில் நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள் என்பது முக்கியம். ஏன் இருவேறு சேஃப்மூன் நாணயங்கள் இருக்கின்றன என்பதற்கான காரணத்தின் ஒரு பகுதியை விளக்க வேண்டுமென்றால், இந்த SAFEMOON நாணயத்தை SFMக்கு மாற்றுவது தானாக நடைபெறவில்லை. அதாவது நாணயதாரர்கள் விரும்பினால், இந்த கிரிப்டோவின் பழைய பதிப்பை வைத்திருக்கலாம். 

சேஃப்மூனுக்கு விரிவாக்கத் திட்டமும் உள்ளது. இதைச் சொல்கையில் தனக்கென சொந்த கிரிப்டோ சந்தையை எதிர்காலத்தில் அமைக்கும் நோக்கமும் உள்ளதைச் சொல்ல வேண்டும். அத்துடன் “ஆபரேஷன் ஃபீனிக்ஸ்” என்ற திட்டமும் உள்ளது. இதில் ஒரு புதிய, மேலும் திறனுள்ள, காற்றுச் சுழலி போன்ற ஒன்றை சேஃப்மூன் நிதி மூலம் அமைத்து ஆப்பிரிக்காவில் பயன்படுத்துவதற்கு இந்நிறுவனம் திட்டமிடுகிறது. செயல்திட்டத்தின் பிற பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்-பண (e-money) உரிமத்துக்காக விண்ணப்பிப்பதும்; சேஃப்மூன் செலுத்துகை அட்டை; ஒரு கிரிப்டோ சந்தை; அத்துடன் ஒரு Web3 வலைத்தொடர்பும் அடங்கும்.

சட்டப்பூர்வக் கவலைகள்

ஜேக் பால் சேஃப்மூனுக்கு ஆதரவு தெரிவித்தார்; இப்போது ஒரு வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
ஜேக் பால் சேஃப்மூனுக்கு ஆதரவு தெரிவித்தார்; இப்போது ஒரு வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது – புகைப்படம்: Shutterstock

2022 பிப்ரவரி 17ல் கலிபோர்னியாவில் சேஃப்மூனுக்கு எதிராக கூட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சேஃப்மூன் ”தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்” மூலம் மக்களை டோக்கனில் முதலீடு செய்யும்படி “ஆசை காட்டியதாக” வாதிக்கப்பட்டது. இதில் சேஃப்மூனின் தலைமை இயக்க அதிகாரியான ஜேக் ஹைனெஸ்-டேவியஸ் மீது பிரபலங்களை அமர்த்தி அவர்களுக்குப் பணம் தந்து கிரிப்டோவை ஏற்கும்படி செய்து அதன் மூலம் அதன் விலையேற்றத்துக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சேஃப்மூன் கிரிப்டோவாலெட் ஏற்படுத்துவதைத் தடுக்கும் முயற்சி காரணமாக விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் ஹைனெஸ்-டேவியஸ், கரோனி, அத்துடன் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹாங்க் வியட், சேஃப்மூனின் உலகளாவிய தயாரிப்புகளின் தலைவர் ரியான் அர்ரியாகா, முன்னாள் நிறுவனப் பிரதிநிதி ஷவுன் விட்ரியோல், ஆதரவு தெரிவித்த பிரபலங்களான யூடியூபர் ஜேக் பால், பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவின் நிக் கார்டர், யூடியூபர் பென் பிலிப்ஸ், ராப்பர்களான சோல்ஜா பாய், லில் யாச்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கரோனி, இதை சேஃப்மூனின் டிஸ்கார்ட் சேனலுக்கு எடுத்துச் சென்று, மக்களிடம் செய்தி குறித்து தான் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது: ”கவலைப்படும்படி ஏதாவது இருந்தால் சேஃப்மூனின் மதி நுட்பமுள்ள சட்டக்குழு எனக்குத் தெரிவித்திருக்கும். அவர்கள் அவ்வாறு ஏதும் தெரிவிக்கவில்லை.”

இறுதிச் சிந்தனைகள்

சேஃப்மூன் பிரபலம் அதிகரித்து வந்தாலும், இந்த டோக்கன் இன்னும் இளமையாகவே உள்ளது. கிரிப்டோவுக்கு 2021 குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்த நிலையில், பிரபலங்களின் ஆதரவுகளினால் அதிகக் கவனம் பெற்ற கிரிப்டோக்களில் சேஃப்மூனும் ஒன்று. இவை சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் முக்கிய அம்சமும் கூட.

வழக்கில் வெற்றி கிடைக்குமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். ஆனால் பிப்ரவரி 21ன்படி,  சேஃப்மூன் V2 மதிப்பு கிட்டத்தட்ட $0.0014 ஆக இருந்தது. இது தரமேம்பாடு நிகழ்ந்தபோது இருந்ததைவிட குறைவு. ஒப்பீட்டளவில் பார்த்தால் 2021 டிசம்பர் 16ல் இதன் தொடக்கவிலை $0.001639. அதாவது தனது ஒட்டுமொத்த மதிப்பில் 14%ஐ இரு மாதங்களில் இழந்துள்ளது.

சில மேடுகளும் பள்ளங்களும் ஒரு கமாடிட்டிக்கு இயல்பான விசயமே என்றாலும் இதில் கவலைதரும் விசயம், குறிப்பாக இதன் அதிகபட்ச விலை $0.007232வை 2022 ஜனவரி 4ல் எட்டியதோடு ஒப்பிட்டு பார்த்தால் ஆறு வாரங்களுக்கு சற்று கூடுதல் நாட்களுக்குள் தற்போதைய விலை 80% இறங்கியுள்ளது. இது தகுதியான முதலீட்டு ஆர்வலர்களிடத்தில் ஒரு பிரச்சனையாக ஆகக்கூடும்.

இந்த நாணயம் தடயமின்றி மறையக்கூடிய சாத்தியமும் உள்ளது. சேஃப்மூனின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள கரோனி, கிரிப்டோகரன்சியுடன் தான் இணைந்திருக்கும் நோக்கத்தில் இருப்பதாகக் கூறினாலும், இதன் வழக்கத்துக்கு மாறான செயல்பாட்டு முறை கவலைக்கு காரணமாக இருக்கலாம். எப்போதும் கிரிப்டோகரன்சியில் நடந்துகொள்வதுபோல, எச்சரிக்கையாக இருங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சேஃப்மூனை உருவாக்கியவர் யார்?

சேஃப்மூன் ஜான் கரோனி என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் அதன் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். தற்போது செயல்பாடுகளின் துணைத்தலைவராக சார்லஸ் கரோனி, தயாரிப்புகளின் உலகளாவிய தலைவராக ரியான் அர்ரியாகா, உள்ளடக்க இயக்குநர் டேவிட் பி. ஸ்மித் மற்றும் மூன்கிராஃப்ட் தலைவராக ஜேகப் ஏங்கல் ஆகியோர் துணைபுரிகின்றனர்.

சேஃப்மூனின் உரிமையாளர் யார்?

இது நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சேஃப்மூனின் உரிமை அதன் முதலீட்டாளர்களிடமும் சேஃப்மூன் நிறுவனத்திடமும் உள்ளது.

சேஃப்மூன் பாதுகாப்பானதா?

அது நிச்சயம் பாதுகாப்பானது என்று சொல்கிறது. எனினும் கடந்த ஆண்டு தணிக்கையில் சில கவலை ஏற்படுத்தும் அம்சங்கள் கொண்டுவரப்பட்டன. கிரிப்டோகரன்சிகள் அதிக மாறியல்புடையவை. நீங்கள் எதில் முதலீடு செய்தாலும், பணத்தை இழக்கும் அபாயத்தை எடுக்கிறீர்கள். உங்கள் சொந்த ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் இழக்கத் தயாராகயிருக்கும் தொகைக்கு அதிகமான பணத்தை ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். விலைகள் இறங்கவும் ஏறவும் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சேஃப்மூன் சட்டபூர்வமானதா?

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக ஏற்கப்பட்ட நாட்டில் நீங்கள் இயங்கினால், சேஃப்மூனை வாங்குவது, விற்பது, வைத்திருப்பது வர்த்தகம் செய்வது சட்டப்பூர்வமானதே. எனினும், சமீபத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பார்த்ததுபோல டோக்கனுக்குப் பின்னால் இந்நிறுவனம் செயல்பட்டுள்ள விதம் சில கவலைகளை ஏற்படுத்துகிறது.

சேஃப்மூனை தனித்துவமானதாக ஆக்குவது எது?

சேஃப்மூனை வேறுபடுத்திக் காட்டுவது, நாணயத்தை வெறுமனே விற்பதற்குப் பதில் வைத்திருப்பதற்காக மக்களுக்கு வெகுமதிகளை அளிப்பதுதான். எனினும் SFM வைத்திருப்பது எந்தளவு இலாபகரமானது என்பது சந்தை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது.

மேலும் படிக்க

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை முதலீட்டு ஆராய்ச்சியாக அல்லது முதலீட்டு ஆலோசனையாக எடுக்கக் கூடாது. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் எந்த அபிப்பிராயமும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இது Currency Com அல்லது அதன் கூட்டாளர்களின் பரிந்துரையாக அமைவதில்லை. இந்தப் பக்கத்தில் வழங்கப்படும் தகவல்களின் துல்லியம் அல்லது முழுமைக்கான மேல் ஒப்பத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ நாங்கள் தருவதில்லை. இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களை சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் அறிந்தே சுயேட்சையாகச் செயல்படுவதையும் இதில் அடங்கிய அனைத்து அபாயங்களையும் ஏற்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
iPhone Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image
உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், இன்டெக்ஸ்கள், கமாடிட்டிகள் மற்றும் கரன்சிகளில் கிரிப்டோ அல்லது பணம் மூலம் வர்த்தகம்
iMac Image